திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் துவக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் இன்று தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆறுநாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது, இதைத்தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது.
பின்னர், 5 ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. தினமும் பகல் 12:45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்தி நாதர் எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேல வாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேர்தலும், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
18 ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான கட்டணங்கள் திடீரென அதிகப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நபர் ஒருவருக்கு 500 மற்றும் 2000 என இருந்த அபிஷேக தரிசன கட்டணம் தற்போது 3 ஆயிரம் ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் 2000 ரூபாயாகவும்,நேரடி சிறப்பு தரிசன கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu