ஒரே இடத்தில் மூன்று சூரியன்-லிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிலை.

தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் அமைந்துள்ள அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை என்னும் ஊரில் அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்.
இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலத்தில் உள்ள மூலவர் 'கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் 'கோமுக்தீஸ்வரர்" என்று பெயர் பெற்றார். மிகப்பெரிய நந்தி மற்றும் திருமூலரின் ஜீவ சமாதி இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு கோமுக்திநகர், நந்திகோயில் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தில் உள்ள விநாயகர் 'துணைவந்த கணபதி" என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இத்தல பிரகாரத்தில் லிங்கத்தின் மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை 'கோரூபாம்பிகை" என்கின்றனர்.mபிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், 'அணைத்திருந்த நாயகர்" உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம். முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்
சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது
ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது இக்கோயிலின் விசேஷம் ஆகும். சிவன் சன்னதிக்கு வலதுபுறத்தில் தியாகராஜர், கமலாம்பிகையுடன் இருக்கிறார். இத்தலமானது திருமணத் தடையை நீக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 99வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தலத்தில் புரட்டாசியில் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில்மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தலத்தில் உள்ள அணைத்திருந்த நாயகரிடம் பிரார்த்தனை செய்தால் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu