மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்- பெண்களின் சபரிமலை.

மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்- பெண்களின் சபரிமலை.
X
பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்களின் சபரிமலை அருள்மிகு சோட்டானிக்கரை பகவதி அம்மன் திருக்கோயில்

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரை என்னும் ஊரில் அருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில் அமைந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சோட்டானிக்கரை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோயில் போற்றப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோயில்களில் இந்த கோயிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இக்கோயில் சபரிமலை ஐயப்பன் கோயிலை போலவே மிகவும் பெயர் பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் உண்டு. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.


காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலது கையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.

இக்கோயிலில் மாசிமகம், நவராத்திரி, கார்த்திகை மண்டல பூஜை, அமாவாசை, பௌர்ணமி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் இங்கு குருதிபூஜை நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோயிலில் திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பிக்கை.

பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புஷ்பாஞ்சலி செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Next Story