அனைத்து தோஷத்தையும் நீக்கி சந்தோஷம் மட்டும் அருளும் தோரணமலை

அனைத்து தோஷத்தையும் நீக்கி சந்தோஷம் மட்டும் அருளும் தோரணமலை
X

தோரணமலை முருகன் 

இந்த கோவிலில் அகஸ்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது.

யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான். அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை.

இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியதாக கூறப்படுகிறது. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.


மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தோரணமலைக்கு வேறொரு தனிச்சிறப்பும் இருக்கிறது. இந்த மலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறத்தில் ஜம்பு நதி பாய்கிறது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இங்கிருக்கும் முருகப்பெருமான் கோவில் பல்வேறு சித்தர்கள் வழிபட்ட தலம் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே சந்தோஷத்தைத் தவிர பிற எந்த தோஷமும் நெருங்காது என்பது பக்தர்களின் நீங்காத நம்பிக்கை.


முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன.

இந்த மலையின் அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரனமலை மன நிம்மதியை கொடுக்கும் இடமாக திகழ்வதாக பக்தர்கள் சொல்கின்றனர். மலை மேலே ஏறி செல்ல முடியாதவர்களுக்காக, மலையடிவாரத்திலும் முருகப் பெருமானுக்கு ஓர் ஆலயம் இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!