தமிழகத்தில் போன பாதையில் திரும்பக்கூடாத சிவாலயம் பற்றி தெரியுமா?

திருவிடைமருதூர் திருக்கோவில்
இந்துக்களின் புண்ணிய பூமி காசி. அந்த காசிக்கு நிகரான ஆறு தலங்கள் தமிழகத்தில் உள்ளது தமிழகத்தில் போன பாதையில் திரும்பக்கூடாத கோவில் பற்றி தெரியுமா?
இந்துக்களின் புண்ணிய பூமி காசி. அந்த காசிக்கு நிகரான ஆறு தலங்கள் தமிழகத்தில் உள்ளது. இது தொடர்பான ஒரு ஸ்லோகம்
"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!
சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட்!!
என்ற இந்த ஸ்லோகத்தின் படி திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் தான் காசிக்குச் சமம் என்பது வரலாறு . இதைத்தவிர அவிநாசி, தென்காசியும் கூட காசிக்குச் சமமானவை என்கிறார்கள் ஒரு சில ஆன்மிகப் பெரியவர்கள்.
சோழநாட்டை ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் தான் திருவிடைமருதூர். சோழ நாட்டில் உள்ள சிவலாயங்களுக்கு எல்லாம் திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர் என்பதால் இங்குள்ள மூலவரின் திருப்பெயர் மகாலிங்கம். திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
காவிரிக்கரையில் மருத மரங்கள் நிறைந்த தென்பகுதியில்,20 ஏக்கர் பரப்பளவில், ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு அமைந்துள்ளது திருவிடைமருதூர் திருக்கோவில்.
இந்த திருக்கோவிலின் தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார் மூலவரான மகாலிங்க சுவாமி.
இத்திருக்கோயிலின் புராண பின்னணி சுவாரசியமானது. வரகுண பாண்டியன் என்ற அரசன் வேட்டையாடிவிட்டு அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தான். அரசன் பயணப்பட்ட குதிரை, வழியில் ஒரு அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் வரகுண பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. பிரம்மஹத்தி தோஷத்தினால் அரசன் படாத பாடுபட்டான். மனநிலை பிறழ்வு ஏற்பட்டு பித்து பிடித்தவனைப் போல சுற்றி வந்தான். நாட்டு மக்கள் இதனால் பெரும் வேதனைக்கு உள்ளானார்கள்.
அரண்மனை மூத்தவர்கள் அறிவுரையின் படி,அரசன் வரகுணபாண்டியன்,அவரது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி,தான் குணமடைய வேண்டும், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டும் என மனமுருகி வேண்டினார். அரசனின் இந்த வேண்டுகோளை ஏற்று அங்கு ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்க சுவாமியை வழிபட தோஷம் நீங்கும் என்ற அருள்வாக்கை தந்தது.
திருவிடைமருதூர் திருத்தலம் தேடி வந்தார் அரசர் வரகுணபாண்டியன் . திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் அரசர் நுழைந்த போது, அதுவரை அவரை பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம்,சிவபெருமான் மகாலிங்க சாமிக்கு அஞ்சி கோயில் வெளியில் நின்று விட்டது. கோயிலில் தரிசனம் முடித்து விட்டு அரசன் திரும்பினால் , மீண்டும் அரசனை பிடித்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருந்தது பிரம்மஹத்தி.
திருக்கோயிலில் மகாலிங்க சாமியிடம் மனமுருகி வேண்டினார் வரகுண பாண்டியன் . கோயிலில் இருந்து திரும்பும்போது, அரசனை பிடிக்க பிரம்மஹத்தி காத்திருப்பதை உணர்ந்த சிவபெருமான், வழிபாடு முடித்த பிறகு வந்த வழியே திரும்பாமல் வேறு வழியே வெளியே சென்று விட அருள்பாலித்தார். அதன் படியே பூரணமாக குணம் அடைந்த அரசன் வேறு வழியில் சென்று விட்டார்.
அரசர் வருவார் பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்த பிரம்மஹத்தியின் எண்ணம் ஈடேறவில்லை. இன்றும் திருவிடைமருதூர் திருக்கோயிலில் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலையை பார்க்கமுடியும். அது தான் பிரம்மஹத்தி என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.
திருவிடைமருதூர் கோயிலில் மகாலிங்க சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளுகிறார் பெருநலமுலை அம்மை. அம்பாள் சன்னிதிக்கு அருகே வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் மூகாம்பிகை அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் .முகாம்பிகை அம்மன் சன்னதிக்கு அருகில் பெரும் சக்தி வாய்ந்த மேரு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் தலத்துக்கு அடுத்தபடியாக இத்திருக்கோயிலில் அன்னை முகாம்பிகை அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனநிலை சரியில்லாதவர்கள் ,தோஷ பரிகாரம் வேண்டுபவர்கள்,நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் கடமை செய்யத்தவறி பிதுர்தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,குழந்தைப்பேறு இல்லாதவர்கள் என பல வேண்டுதல்கள் கோரிக்கைகளுடன் வருபவர்களுக்கு,வேண்டியவற்றை கொடுத்து அருள்புரிகிறார் மகாலிங்க சாமி.
கோயில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிடைமருதூர்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu