திவ்ய தேசங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன் தரும் திருவெள்ளியங்குடி ஆலயம்
108 வைணவ திவ்ய தேசங்களில் கும்பகோணம் அருகே இருக்கும் திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோவில், 22-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன அவதாரத்துடன் தொடர்புடைய இத்தலம், நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ள சிறப்பைக் கொண்டது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும்தான் கருடாழ்வார் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.
சுக்ரபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், நவக்கிரகங்களில் சுக்கிரனால் (வெள்ளி) தவம் இயற்றி வழிபடப்பட்டுள்ளது.
திருவெள்ளியங்குடி பெருமாளை தரிசித் தால் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒளியிழந்த கண்களோடு தவித்த சுக்கிராச்சாரியார், ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இத்தலத்தில் அணையா தீபமாக பிரகாசிக்கிறார். அதனால் இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.
தல புராணம்
ஒரு தடவை தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மாவுக்கும் அசுரர்களின் சிற்பியான மயனுக்கும் சிற்பக் கலைத் திறமையில் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. பிரம்மதேவன் இருவருக்கும் சமாதானம் செய்ய முனைந்தார்.
"எத்தனையோ கோவில்களை நான் கட்டி முடித்திருக்கிறேன். பெருமாளுக்குரிய திவ்விய தேசங்கள் பலவற்றை நான்தான் கட்டினேன். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்டநாதர் கோவிலையும் நான்தான் கட்டினேன். அப்படியிருக்க என் முன்னால் அசுர சிற்பியான மயன் எவ்வாறு நிற்க முடியும்?"என்று விஸ்வகர்மா கூறினான்.
பிரம்மா குறுக்கே நுழைந்து, "அதெல்லாம் உன்னுடைய திறமை என்று வீராப்பு கொள்ளாதே. போன ஜென்மத்தில் நீ செய்த இறைத் தொண்டுக்கான பெருமாளின் கருணை அது. அவர் நினைத்தார். நீ செய்தாய் அவ்வளவுதான்!" என்றார்.
தலை குனிந்தான் விஸ்வகர்மா. மயனைப் பார்த்தார் பிரம்மா. 'நீ பூலோகம் சென்று காவிரிக் கரையில் சிறந்ததோர் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய். அவர் உனக்கு காட்சி கொடுப்பார். அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை எழுப்பினால் உனக்கும் விஸ்வகர்மா போல் புகழ் கிடைக்கும்!" என்று ஆசிர்வதித்தார்.
பிரம்மாவின் யோசனைப்படி மயன் பூமிக்கு வந்து பல இடங்களை ஆராய்ந்தான். இறுதியில் பாஸ்கர ஷேத்திரத்தில் மார்க்கண்டேயர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினான். அவனது தவத்துக்கு இறங்கி சங்கு சக்கரதாரியாக மகாவிஷ்ணு ஷீராப்தி நாதராக (பாற்கடல்நாதர்) திருக்காட்சி தந்தார்.
அதைக் கண்ட மயன், "பெருமானே! எனக்கு ஒரு ஆசை. நான் தங்களை ராம அவதார திருக்கோலத்தில் காண விரும்புகிறேன்!" என்று வேண்டினான்.
பெருமாள் புன்னகையுடன் தம் கரத்தில் இருந்த சங்கு சக்கரத்தை அருகில் இருந்த கருடனின் கையில் தந்து விட்டு பின் வில், அம்புகளுடன் அலங்காரக் கோலத்தில் கோல வில் ராமனாகக் காட்சியளித்தார். எனவேதான் இவருக்கு கோலவில்லி ராமன் என்ற திருநாமம் ஏற்பட்டது.
பகவானின் பாதங்களில் விழுந்த மயன் பெருமகிழ்ச்சியடைந்து அழகிய மதிலும் சுற்றுப் பிரகாரங்களும் கொண்ட ஒரு ஆலயத்தை அங்கே அமைத்தான்.
பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டபோது அத்தகைய தானத்தைத் தர வேண்டாம் என்று வெள்ளி பகவான் சுக்கிராச் சாரியன் கூறினார். தானத்துக்கு இடையூறாக இருந்ததால் அவர் தன் கண்களை இழந்தார்.
பார்வை இழந்த கண்களை திரும்பப் பெறுவதற்கு இந்தத் தலத்தில் ஒரு மண்டலம் (45 நாட்கள்) தவமிருந்தார். தவத்தை மெச்சிய கோலவில்லி ராமன் சுக்கிரனுக்குக் காட்சி கொடுத்து கண் பார்வை மீண்டும் கிடைக்க அருள் பாலித்தார்.
"வெள்ளியே! உனக்கு வேண்டிய வரம் கேள்!" என்று கேட்க, "நீங்கள் எனக்குக் காட்சி கொடுத்த இந்தத் தலம் என் பெயரிலேயே 'வெள்ளியங்குடி' என்று வழங்கப் பட வேண்டும்!' என்று வேண்தியதால் இந்தத்தலம் வெள்ளியங்குடி என்று தற்போது வழங்கப்படுகிறது
திரேதாயுகத்தில் பிரம்மாவுக்கு இத்தல பெருமாள் காட்சி அளித்ததால் பிரம்மபுத்திரம் என்ற பெயரும், திரேதாயுகத்தில் பராசர முனிவருக்கு தரிசனம் தந்ததால் பராசரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திரருக்கு அருள் புரிந்ததால் 'சைந்திர நகரம்' என்றும், கலியுகத்தில் பார்க்கவனுக்கு (சுக்கிரனின் மறு பெயர் பார்க்கவன்) காட்சி கொடுத்ததால் 'பார்க்கவபுரி' என்றும் சுக்கிரபுரி என்றும் இத்தலத்துக்கு புராணப் பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் வயல்கள் சூழ்ந்த பகுதியில் காணப்படுகிறது.
கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கருவறையில் மூலவர் ஷீராப்திநாதர் கிழக்கே திருமுக மண்டலத்துடன் புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கிறார். ராமர் உபய நாச்சி யார்களுடன் தரிசனம் தருகிறார். தன்னை அழுகுபடுத்திக் கொள்வதில் பிரியம் கொண்ட உற்சவ மூர்த்தி சிருங்கார சுந்தரன் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.
கருவறையில் அனுமனின் வடிவத்தை காணலாம். கோவிலுக்கு எதிரே அனுமன் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு கருடாழ்வார் நின்ற நிலையில் அமர்ந்த நிலையில் இல்லாமல் எழுகின்ற நிலையில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
வருடத்தில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி முதல் தேதிகள் அதாவது விஷ்ணுபதி புண்ணிய காலத் தில் சிறப்புப் பிரார்த்தனைத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அந்தப் பிரார்த் தனை செய்தால், நினைத்தது பலிக்கும் என்கின்றனர்.
சுக்கிராச்சாரியாருக்கு கொடுக்கப்பட்ட ஒளி இன்றைக்கும் நேத்ர தீபமாக இக்கோவி லில் பிரகாசித்துக் கொண்டி ருக்கிறது. தேவலோகப் பதவியை இழந்த தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து வேதவிற்பன்னர்களைக் கொண்டு பெருமாளுக்குப் பல உற்சவங்களைச் செய்து தன் பதவியை மீண்டும் பெற்றான்.
பராசர முனிவர் நீண்டகாலம் இந்தத் தலத்தில் தங்கி வைகாசன ஆகம முறைப்படி ஆராதனை செய்து சித்தி பெற்றார். முனிவர் எழுப்பிய பராசர தீர்த்தம் இந்த ஊரில் உள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் பத்து மங்களா தரிசனம் செய்யப்பட்ட தலம் இது. அகோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ' ஜகத்குரு பரமாச்சாரியார் ஆகியோர் பல காலம் இங்கு தங்கியிருந்து சாதுர் மாஸ்ய வியாச பூஜை செய்திருக்கிறார்கள்.
தல விருட்சமான செங்கதலி என்ற செவ்வாழை கோவிலின் உட் பிரகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்து வளர்ந்துள்ளதைக் காணலாம். ஆண்டுக்கு ஒரு தடவையே இது தார் போடும்.
இத்தலம் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில், வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்காத்திகை விழா, வைகுண்ட ஏகாதசி வைபவ தினங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி, தாயார் வீதிஉலா வருவது வழக்கம்.
இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் வைகாசி ரோகிணி நாளிலும் மாசி மாதம் முழுவதிலும் அதிகாலையில் நீராடினால் சகல விதமான தோஷங்களும் நீங்கிவிடும் என்பது சான்றோர் வாக்கு.
சுக்கிர வாரத்தில் (வெள்ளிக்கிழமை) இத்தலத்துக்கு வந்து பெருமாளை சேவித்தால் எல்லா நலன்களும் கிட்டும். சுக்கிர யோகம் அதிகரிக்கும். திரு மணத்தடை உள்ளவர்கள், கண் பார்வை குறை உள்ள வர்கள் நிவர்த்தி பெறும் தலம் இது.
திருவெள்ளியங்குடி தலம் கும்பகோணம், அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் மற்றும் திருப்பனந் தாளில் இருந்து 5 கி.மீ. தொலை வில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து அணைக்குடி வழியாக நகரப் பேருந்து வசதி உண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu