ஐஸ்வர்யம் அருளும் திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோயில் பற்றி தெரியுமா?

ஐஸ்வர்யம் அருளும் திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோயில் பற்றி தெரியுமா?
X
ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.

எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும் இடையூறு இன்றி இனிது முடிய எல்லோரும் பிரார்த்திக்கும் முதற்கடவுள் கணபதிதான். போகிற அவசரத்தில் கூட, எளிதில் தரிசித்து வணங்கி விட்டுச் செல்லும் விதத்தில் எளிமையாகக் கோயில் கொண்டுள்ள ஒரே கடவுள் இவர்தான். எந்தச் சாலை வழியாகப் போனாலும் கூப்பிடு தொலைவில் ஒரு பிள்ளையார் கோயில் என்பது தமிழகத்தின் தனிச்சிறப்பு.


இந்து மதத்தில் கணபதியையே பரம்பொருளாக வழிபட்டு வந்த ஒரு பிரிவினர் இருந்தனர். இந்த வழிபாட்டிற்கு காணபதம் என்றும் பெயர் இருந்ததாக காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறார். கணபதி மூலாதார சக்தி உருவினர், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர். அவரது துதிக்கையே ஓங்காரத்தைக் குறிக்கும் வகையில் அமைந்ததுதான்.

கணபதி என்னும் பதத்தில் உள்ள க என்பது மனோ வாக்குகள் ண என்பது அவற்றைக் கடந்த நிலை. அவ்விரண்டுக்கும் ஈசன் கணேசன். சிலர் க என்பது அறிவு ண என்பது வீடு என்று கொண்டு அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்பர். கொடிய மாயையை துண்டிப்பவர் என்பதால் வக்ர துண்டர் எனப் பெயர் கொண்டார்.

அவர் வாகனமாகிய மூஷிகம் நமக்குள் இருந்து நம்மை அழிக்கும் கள்ளத்தன்மையான உலகப் பற்று என்றும், அவர் உண்ணும் மோதகம் இன்பத்தைப் பயக்கும் ஞானம் என்றும் கூறுவர். கணபதி வழிபாட்டுக்கு ஆதாரமான நூல்கள் கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம் என்ற இரு சிறு உபநிடதங்கள். கணேச வழிபாட்டை காணபத்யம், கணாபத்யம் என இருவகையாகக் கூறுவர். கணேச புராணம், ஸ்காந்தத்தில் உள்ள கணேச மான்மியம், பிரம வைவர்த்த புராணத்திலுள்ள கணேச கண்டம், முத்கல புராணம் என்ற புராணங்களும் கணேச கீதை, கணேச தந்திரம், கணேச கல்பம், கணேசா சார சந்திரிகை முதலிய தனி நூல்களையும் பிள்ளையார் வழிபாட்டு முறைக்கு ஆதார சாஸ்திர நூல்களாகக் கொண்டிருந்தனர்.

கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோயில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோயில் எனப் பெயர் பெயர் பெற்றது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோயிலில் மூலவர் தனி, உற்சவர் தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இரண்டுக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். இக்கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.

சங்கடஹரசதுர்த்தி, பெரிய சதுர்த்தி, கார்த்திகை, வருடப்பிறப்பில் விழா நடக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று உற்சவர் கணபதி ஊருக்குள் வீதி உலா நடைபெறும். ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது...

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil