வக்கிர நிவர்த்தி செய்யும் திருவக்கரை வக்கிர காளியம்மன்..

வக்கிர நிவர்த்தி செய்யும் திருவக்கரை வக்கிர காளியம்மன்..
X

திருவக்கரை வக்கிர காளியம்மன் 

Thiruvakkarai Vakrakaliamman Temple History in Tamil-விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோவிலில் காலடி எடுத்து வைத்தாலே, அனைத்து வக்கிரத் தோஷங்களும் நிவர்த்தியாகி விடுமாம்

Thiruvakkarai Vakrakaliamman Temple History in Tamil-தமிழ்நாட்டில் எத்தனையோ காளி கோயில் இருந்தாலும் அவற்றில் மிகவும் பிரபலமான காளி கோயில், திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோவில்.

இந்த ஆலயத்துக்குள் யார் காலடி எடுத்து வைத்தாலும், அடுத்த நிமிடமே அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் தவிடு பொடியாகி விடும் என்பது நம்பிக்கை. சிவன் கோவிலாக இருந்தாலும், காளியின் சிறப்பு காரணமாக இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது. தொண்டை நாட்டில் உள்ள 32 சிவத்தலங்களுள் திருவக்கரை 30-வது தலமாகும்.

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது வக்கிர காளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது வக்கிர காளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற சந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளது வக்கிர காளியம்மன் சன்னதி. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் கோவில் அமைந்துள்ளது.

முற்காலத்தில் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர். குண்டல மகரிஷி என்ற முனிவர் இங்கே வாழ்ந்து சமாதியாகி இருக்கிறார். அவருடைய பேரனான வக்கிராசூரனும் அவனுடைய சகோதரி துர்முகியும் சிவ பக்தர்கள். வக்கிராசூரன் அரியவரம் பெறுவதற்காக ஈசனை நோக்கி நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான். முடிவில் ஈசன் அவன்முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவர் மூவராலும் தான் அழிக்க முடியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான்.

அப்போது ஈசன் தனக்கு அசைவ உணவு ஆகாதே என்று கூறவே, காலையில் பூஜை முடித்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான். ஈசனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

அதன்படி ஈஸ்வரியை அழைத்த மகாவிஷ்ணு, அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை துன்முகியின் காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று கூறினாராம்.

அப்போது துன்முகி கர்ப்பமாக இருக்கவே குழந்தையை வதம் கூடாது என்ற தர்ம சாஸ்திரத்தின் காரணமாக, துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு சம்காரம் செய்தாளாம்.

மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்து, பின்னர் வக்கிராசூரனை அழித்து ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தால் அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தப்படுத்தி இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ இயந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 முறை இடப்புறம் 4 முறை என சுற்றிவர வேண்டும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர்.

பொதுவாக காளி கோவில் என்பது ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊருக்கு நடுவில் உள்ள கோவிலில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்திருப்பது வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளை உடைய தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் குண்டலம், வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், போன்றவை இருக்கிறது. வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.

காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டிருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். எல்லாக் கோவில்களிலும் கோபுர வாசலில் இருந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் திருவக்கரைக் கோவிலில் ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திர மவுலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் காணப்படுகிறது.

கோவில் வடிவமைப்பு மட்டுமல்லாது சிலைகளும் வக்கிர நிலைகளிலேயே காணப்படுகிறது.

மனநிம்மதி கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்க, பூர்வஜென்ம பாவங்கள் விலக, புத்திர தோஷங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

வக்ர தோஷங்கள், ஜாதக கிரக தோஷங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.

பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கும், அமாவாசையன்று பகல் 12 மணிக்கும் வக்கிரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்வது இத்தலத்தின் முக்கிய விசேஷம்.

திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது மூலம் திருவக்கரை கோவிலை அடையலாம்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவக்கரை கோவிலுக்கு புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது செல்கின்றன. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil