கோவிலில் வழிபாடு செய்ய விதி முறைகள் இருக்கிறது - அது என்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம். மிகச் சிலரே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும் , அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆகிய அடிப்படைகளை பலரும் மறந்து விட்டோம்.
நம்முடைய திருக்கோயில்கள் பெரும் சக்திகளை உள்ளடக்கியது. யோகியரும் ஞானியரும் பல அற்புத சக்திகளை திருக்கோயில்களில் உணர்ந்து உள்ளனர், நமக்கும் உணர்த்தியுள்ளனர். பழம் பெருமையும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட திருக்கோயில்களில் செல்போன் காமிராவில் செல்பி எடுத்துக் கொள்வதும், அநாகரிக ஆடைகள் அணிந்து செல்வதும், கூச்சலிட்டு ஆரவாரம் செய்வதும், பக்தியில் கவனமின்றி செல்போனில் பேசித் திரிவதும் பாவத்தையே நம்மிடம் சேர்க்கும்.
திருக்கோயில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். இறைவனின் இல்லம் அது. எனவே கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவது வாங்கிச் செல்வது உத்தமம். குறிப்பாக அடுத்தவர் கவனத்தை சிதறச் செய்யும் ஆடைகளை அணியாமல்,நேர்த்தியான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
சிவன் கோயிலுக்கு வில்வத்தையும், பெருமாள் கோவிலுக்கு துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம். கோயிலுக்குள் உள்ளே செல்லும் போது முதலில் கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.
விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தைச் சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும். இறைவனுக்கு நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.
வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். திருக்கோயிலில் இருக்கும் நேரமாவது சிவ நாமமும் நாரயண நாமமும் தவிர நமது புத்தியில் மனதில் வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. ஆலயத்திற்குள் எந்த தனி மனிதரையும் வணங்கக் கூடாது. அப்படி வணங்கினால், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது. கோவிலிலிருந்து, பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.
சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும். சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நம்மை செய்வினை தோஷங்கள் அண்டாது.
இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், திருக்கோயில்கள் தெய்வ சன்னதி என்பதை உள்ளப்பூர்வமாக உணர்ந்து வணங்கிட நம் பாவங்கள் தீரும். நோய் நொடி அகலும். வீட்டில் மகாலட்சுமி அருள் நிலைக்கும்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu