இன்று (ஜூலை 31) ஆடி மாத தேய்பிறை அஷ்டமி-கடன் பிரச்சனைகள் தீர பைரவரை வழிபடுங்கள்
தேய்பிறை அஷ்டமி... பைரவர் வழிபாடு...!!
இன்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமி.. கடன் பிரச்சனைகள் தீர பைரவரை வழிபடுங்கள்..!!
ஜூலை 31 ஆடி மாதம் சனிக்கிழமை இன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால் மிக மிக விசேஷமான ஒரு நாளாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், பைரவரையும் வழிபட இல்லத்தில் நிம்மதியும், சுபிட்சமும் உண்டாகும் என்பது ஐதீகம். எப்படி இந்த நாளில் வழிபாடு செய்து பலன் பெறுவது? என்பதை தெரிந்து கொள்ளலாம்
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர்.
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மகத்துவங்களைத் தந்தருளும். ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த தினமாகும். தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து ராகு காலத்தில் பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற பைரவர் சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காய் உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும்.
ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வணங்கினால் எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். வருமானம் பெருகும். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும்.
சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும். பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu