அயோத்தி ராமர் கோவில் கருவறையில் கிரேன் உதவியுடன் வைக்கப்பட்ட சிலை
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்ட சிலை.
அயோத்தி ராமர் கோவில் உள்ளே ராமர் சிலை கொண்டு வரப்பட்டது. கோவிலின் கருவறை உள்ளே ராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது. ஜனவரி 22ம் தேதி இந்த சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்படும்.
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
இந்த கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். இந்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார்.
ஏனென்றால், இந்த விழா சாஸ்திரங்களுக்கு எதிராக அல்லது புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.
ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், மற்றவர்கள் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக்கணிக்கிறார்கள், என்று விமர்சனம் வைத்துள்ளார். மோடி பயணம்: அதற்கு முன்னதாக ஜனவரி 19ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் 19ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். அதன் பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu