அருணகிரி நாதருக்கு முருகப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் பாடல் அடி
அருணகிரி நாதர்
தமிழ்க்கடவுள் முருகனைப் பாடிப்பாடி மெய் உருகினவர்கள் ஏராளம். முருகனைப் பாடியதால் தமிழ் வளர்ந்தது. தமிழ் செழிப்படைந்தது. முருகன் துதிகளில் மிகச்சிறப்பானது திருப்புகழ்.பாடும்போதும், கேட்கும் போதும் மனதை கரைக்கும் மந்திரசக்தி திருப்புகழுக்கு உண்டு.
அருணகிரிநாதரை திருப்புகழ் எழுத வைத்ததும் முருகனின் பெருங்கருணையே. திருப்புகழ் தந்த அருணகிரி நாதர் பிறந்த ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்று சிலர் சொல்கின்றனர்
அருணகிரி நாதரின் மூத்த சகோதரி திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தார் என்று சொல்கின்றனர்.
இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அருணகிரிநாதருக்கு. உரிய வயதில் திருமணமும் நடந்தது. கர்மவினையின் காரணத்தாலோ என்னவோ, பிற பெண்களின் தொடர்பு அவருக்கு அதிகமாய் இருந்தது. கட்டிய மனைவி இருந்தும், வெளியில் தவறான பெண்களிடம் ஈடுபாடு கொண்டு சேர்த்து வைத்த புகழையும் பொருளையும் தொடர்ந்து இழந்தார்.
அருணகிரிநாதரின் காமம் தலைக்கேறியதால் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது. பெருநோயால் அவதிப்பட்ட நிலையிலும் காமம் தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முயன்றார். நோய்க்கோலம் கொண்டவரை புறக்கணித்தாள் மனைவி. வெறுத்து ஒதுக்கிய அவமானத்தைக் கடந்து காமத்தில் அருணகிரிநாதர் தவிக்க , கடும் கோபமுற்ற சகோதரி, உனக்கு பெண் தானே வேண்டும் என்று சொல்லி தன்னைப் பெண்டாளுமாறு சத்தமிட, அந்த நிமிடத்தில் தன்னிலை உணர்ந்தார் அருண்கிரிநாதர்.
தீராத வேதனையுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்றார்.அங்கு கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோது காட்சி தந்தார் தமிழ்க்கடவுள் முருகப் பெருமான்.
குன்றுதோறாடும் குமரன், தனது திருக்கரங்களால், "அருணகிரி !நில்!" என்றும் சொன்னார். திகைத்த அருணகிரிநாதருக்கு தம்மைக் காப்பாற்றியது மயில்வாகனன் என்பதை அறிந்து பரவசமானார்.
இந்த உணர்ச்சிப் பெருக்கில் இருந்து மீளாத அருணகிரி தவிக்க , முருகனோ "அருணகிரிநாதரே! " என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
"முத்தைத் தரு பத்தித் திருநகை" என எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார் முருகப் பெருமான். தித்திக்கும் திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும். மனம் தெளிவு பெரும். முருகப்பெருமானின் கருணைப் பார்வை நம் துன்பங்களை போக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu