தாய்க்கு இணையான உயிரினம் பசு - புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு
புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு
மனித வாழ்க்கையில் தாய்க்கு இணையான ஒரே உயிரினம் பசு. குழந்தைப் பருவத்தில் நமது வாயால் அம்மா என்று சொல்லும் முன் குழந்தைகளின் காதில் பசு எழுப்பும் அம்மா என்ற அந்த அமுதக் குரல் காதுகளை நிரப்பி இருக்கும்.
கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும். பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும். முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி , கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும்.
மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். உண்பதற்கு பசுவிற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) நம்மை பிடித்த தீராத பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது.
இது மிக புண்ணியமான காலமாகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். " மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும்.
மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எம தூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். ஒருவர் இறந்த பின் பூலோகத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம் , சலம் , சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இந்த துன்பம் நிச்சயம் ஏற்படாது. அவரால் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விட உதவுகிறது என்கிறது கருட புராணம்.
கோமாதா நம் குலம் காக்கும் தெய்வம். கோமாதவை வழிபட நம் குலம் செழிக்கும். வாழ்வு வளம் பெருகும்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu