கேரளாவில் கனமழை: சபரிமலை பக்தர்களுக்கு தற்காலிக தடை
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.
இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதை தொடர்ந்து நீல நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மழைக்கு வீடு இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மலையோர மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஆண்டின் முதல் போக சாகுபடி முடிந்ததும் விளையும் தானியங்களை கோயிலில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பூஜையான நிறை புத்தரி பூஜைக்காக, சபரிமலை கோவில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.
ஆனால், பத்தனம்திட்டா பகுதியில் பெய்து வரும் கனமழையை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண் கழகம் இன்று ரெட் அலார்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து கேரளாவில், மழை பெய்ய கூடும் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால், பக்தர்கள் வருவதற்கு சபரிமலை கோவில் தற்காலிக தடை விதித்து உள்ளது. சன்னிதானத்தில் உள்ள பக்தர்களையும் வெளியேறும்படி கேட்டு கொண்டுள்ளது.
இதனையடுத்து இன்றிரவு 10 மணியளவில் கோவிலின் நடை மூடப்படும் எனவும், வருகிற 16ந்தேதி மாலையில் மாதாந்திர பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu