சூரிய பகவானுக்கு உரிய தினம் : இன்று சூரிய பகவானை வழிபடுவது நலம்
இன்று (1-8-2021) ஆடி மாத ஞாயிறு என்பதால், சூரியனை வழிபட வேண்டியது மிகவும் அவசியம். இந்த தினத்தில் சூரிய பகவானுக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை நம்மால் பெற முடியும்.
சூரிய பகவானை நினைத்து இந்த பூஜையை எப்படி செய்வது? இந்த மந்திரத்தை எப்போது உச்சரிப்பது? என்பதை பார்ப்போம்.
சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரியன் உதயத்திற்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
அதன் பின்பு சூரிய உதயத்தின் போது, வீட்டிலிருந்து வெளியே வந்து, சூரிய பகவானைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி மனதார வணங்க வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வது அவசியம்.
ஆண்களாக இருந்தால் இரு கைகளையும் தலைக்கு மேல் பக்கமாக உயர்த்தி வணங்கி, சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து கும்பிட்டு, சூரிய பகவானை வணங்கி நமஸ்காரம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது. அதன் பின்பு சூரிய பகவானைப் பார்த்து இந்த மந்திரத்தை காலை 6 மணிக்கு உச்சரிக்க வேண்டும்.
வீட்டிற்கு வெளியில் வந்து நின்று சூரிய பகவானை பார்த்தவாறு தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். மொட்டைமாடியோ, பால்கனியோ எங்கு நின்று உச்சரித்தாலும் பரவாயில்லை, உங்களுடைய கண்களுக்கு சூரிய பகவான் தரிசனம் தெரியவேண்டும்.
சொல்ல வேண்டிய சூரிய பகவான் மந்திரம் : 'ஓம் ஸ்ரீம் ஆதித்யாய நமஹ'
இந்த ஒரு வரி மந்திரத்தை சூரியனைப் பார்த்து மூன்று முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு உங்களுடைய பூஜை அறைக்குள் வந்து நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தை பார்த்து மனதார 108 முறை சொல்லுங்கள்.
பலன்கள்: உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். பிரச்சினைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் மன உறுதி உங்களிடம் ஏற்பட்டுவிடும்.
இந்த வழிபாட்டினை வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், இந்த முறையை பின்பற்றி சூரிய பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. இதேபோல் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும், வீட்டில் தீபம் ஏற்றி வைத்து சூரிய பகவானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கண்கூடாக காணமுடியும். சூரிய பகவானின் அருளைப் பெற இந்த வழிபாடு மிகவும் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu