ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் முதல் நாளான இன்று நம்பெருமாள் எழுந்தருளிய காட்சி.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் எனவும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது எனவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் ஆகும். இக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழா நாட்கள் தான் என்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா பகல் பத்து மற்றும் ராப்பத்து , இயற்பா என மொத்தம் என 21 நாட்கள் நடைபெறும். ராப்பத்து விழாவின் முதல் நாள் நடைபெறும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. அப்போது பெருமாளை வழிபடும் அரையர்கள் எனப்படும் பட்டாகள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களை மூலஸ்தானத்தில் ரங்கநாதர் முன்பாக பாடினார்கள். இதனை தொடர்ந்து பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை தொடங்கியது.
இதனையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை எழுந்தருளினார். மகேந்திரன் சுற்று வழியாக அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலையிலிருந்து மதியம் வரை அர்ஜுன மண்டபத்தில் வீற்றிருந்த நம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாளுடன் ராமானுஜர் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் வந்தனர். பொது ஜன சேவையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது அரையர்களும் நாலாயிரம் திவ்விய பிரபந்த பாடல்களை இசையுடன் கூடிய அபிநயத்துடன் பாடினார்கள்.
இதேபோன்று வருகிற 22ஆம் தேதி வரை நம்பெருமாள் காலையில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். 22ஆம் தேதி மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் கோலத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் குறிப்பிடத்தக்கது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் திருச்சி மாநகர போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu