அறிவியல் பார்வையில் ஆன்மீகம்: என்.கே.மென்டிஸ் எழுதும் சிறப்புத் தொடர்

அறிவியல் பார்வையில் ஆன்மீகம்: என்.கே.மென்டிஸ் எழுதும் சிறப்புத் தொடர்
X

டக்ளஸ் பிரிஸ்டன் என்னும் ஆய்வாளர், அவர்  எழுதிய   “The Lost City of the Monkey God” என்ற புத்தகம். 

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஆய்வாளர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்டவருமான என்.கே.மென்டிஸ் எழுதும் சிறப்புத் தொடர்.

சனாதன தர்மம் எனும் இந்துமதத்தின் பெருமையைஆய்வாளர்கள், அருளாளர்கள் பலரும் நிச்சயித்துக் கூறியுள்ளது இந்துக்கள் அனைவரும் பெருமைக் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது.

உலகின் பல பாகங்களிலும் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் சிலைகளும், சிவலிங்கங்களும் கிடைத்து வருவது அந்த கருத்திற்கு வலுசேர்க்கும் ஒன்றாக அமைவதுடன் மேலும் பல இந்து கடவுள்களின் சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பெருமைகளை கொண்ட சனாதனதர்மத்தின் தொன்மையினை உலகிற்கு பறைசாற்றுவதே அறிவியல் பார்வையில் ஆன்மீகம் என்னும் இந்தத் தொடரின் நோக்கமாகும்.

உலகில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி மறைந்த நிலையில் ஆதிகாலம் முதல் இன்றுவரை நிலைத்து நிற்கும் நாகரீகமாக தமிழர் நாகரீகம் காணப்படுகிறது. மதுரையில் கீழடி ஆய்வின் மூலம் இந்த உண்மை உலகிற்கு பறைசாற்றப்பட்டு வருகிறது. சுமேரியர்,எகிப்தியர்,மாயன்கள் போன்றமாபெரும் நாகரீகங்கள் உலகில் தோன்றி மறைந்துள்ள நிலையில் இந்த நாகரீகங்களில் காணப்பட்ட செவி வழி கதைகள் நமது இந்துமத புராணங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை ஒத்துள்ளமை இங்குசுட்டிக் காட்டத்தக்கது.

நமது புராணங்களில் பலலோகங்கள் பற்றியகுறிப்புக்கள் காணப்படுவதுடன் வேற்று கிரக சஞ்சாரங்கள், வேற்றுகிரகங்கள், காலபயணங்கள் போன்றவை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமதுபுராணங்களில் பாதாளலோகம் என்று அழைக்கப்பட்ட உலகமானது அமெரிக்க கண்டத்தை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு சான்றாக மாயன்கள் அங்கு வாழ்ந்ததையும், பலி சக்கரவர்த்தி மயன் என்னும் அசுர சிற்பியுடன் அங்கு சென்றதாகவும் ஒருசெவி வழி கதையுண்டு.

மெக்சிகோ அருங்காட்சியகத்தில் காணப்படும், மாயன் இனத்தவர்கள் யோகநிலையில் அமர்ந்துள்ள சிற்பம்.

விஷ்ணுவின் வாமணஅவதாரத்தின் போது மகாபலிசக்கரவர்த்தி பாதாளலோக அதிபதியாக நியமிக்கப்பட்டார் என மகாபாகவத புராணம் கூறுகிறது. இதை போன்றதொரு கதை மெக்சிகோ நாட்டின் நூதன சாலையில் வரையப்பட்டுள்ள சித்திரத்தின் மூலமும் உணர்த்தப்படுகிறது. மெக்சிகோ நாடானது பாரதத்திற்கு நேர் எதிரே காணப்படுவதனால் அதனை பாதாளலோகமென பாரதகண்டத்தில் இருந்தவர்கள் கூறியிருக்கலாம்.

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு கதை மெக்சிகோவில் உள்ளது. வெகு தூர நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஒரு மன்னன் விமானம் மூலம் மெக்சிகோவில் தரையிறங்கியதாகவும், அவர் புதிய நாகரீகத்தை அங்கு உருவாக்கியதாகவும் மெக்சிகோ அருங்காட்சியகத்தில் வரையப்பட்ட ஓவியக்கதை கூறுகிறது.

இவருடன் சிற்பியான மயன் பயணம் செய்யவும் அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மயன் என்பவர் சிறந்த சிற்பியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையொட்டி மாயன் இனத்தவர்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மாயன் இனத்தவர்கள் சூரியனை குலதெய்வமாக வழிப்பட்டுள்ளனர் என்பது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. பண்டைய நாகரீகங்களில் சனாதன தர்மத்தை கடைபிடித்த இந்துக்கள் சூரியனை வழிபட்டுள்ளார்கள் என்பதுடன் தமது காலகணிப்புக்களை சூரியனை மையமாக வைத்தே மேற்கொண்டுள்ளனர். மாயன் இனத்தவர்களின் நாட்காட்டியும் சூரியனை மையமாக வைத்து கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சனாதன தர்மத்தை கடைபிடித்தவர்களும், மாயன் இனத்தவர்களும் ஒரே விதமான காலகணிப்புக்களை மேற்கொண்டார் என்பது புலனாகிறது. மேலும் சௌரம் என்னும் மதம் மூலம் இந்துக்கள் சூரியனை முழுமுதற் கடவுளாக வழங்கிய வரலாறும் ஒன்று. இந்த விஷயத்தையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.

மேலும் ஒரு விஷயத்தை நாம் இங்குசுட்டிக் காட்டலாம். இராமபிரானையும் அவரது தம்பி இலட்சுமணனையும் இராவணேஸ்வரனின் உறவினரும் பாதாளலோக அதிபதியுமான மயில் இராவணன் என்பவர் சிறைபிடித்து பாதாளலோகத்தில் அடைத்து வைத்ததாக ஒரு செவி வழி கதையுண்டு.

இதனையடுத்து இலட்சுமணரின் துணையுடன் பாதாளலோகத்தை சென்றடையும் ஆஞ்சநேயர் அங்கு வானரமுகம் கொண்ட ஒருவரை சந்திப்பதாக அந்த கதையில் கூறப்படுகிறது. அவரது பெயர் மகரத்வஜன் என அறியப்படுகிறது. மகரத்வஜனின் தாய் அங்கு வந்து, தான் மச்சகன்னி இனத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும், ஆஞ்சநேயர் கடலை தாண்டும் போது அவரது வியர்வைதுளி மூலம் கர்ப்பமடைந்து மகரத்வஜனை பெற்றெடுத்ததாகவும் கூறுகிறார். இங்குமச்சகன்னி இனப் பெண் என்பதை நாம் மீனவப் பெண் என்ற கோணத்திலும் ஆராயலாம்.

வியர்வைதுளி மூலம் கர்ப்பமடைந்ததாகக் கூறுவதையும் நாம் ஆராயவேண்டும். பலகோணங்களில் இயங்கக்கூடிய ஒருவர் இறைவன் என்ற நிலையை அடைவது இயல்பானதாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டோமேயானால் 3 பரிமாணங்களை உடையவர்கள் ஆவர். முப்பரிமாணத்தைவிட அதிகளவிலான பரிமாணங்களை கொண்டவர்கள் கடவுள் என்ற நிலையை எட்டக் கூடியவர்கள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து விழுந்த தீப்பொறிகள் மூலம் முருகன் தோன்றியதாக கூறப்படுகிறது. இது ஆய்வுக்குரிய விஷயமென்றாலும் தற்காலத்தில் சில தாவரங்களும், சில உயிரினங்களும் தனிஉயிரினம் இன்னுமொரு உயிரினத்தின் துணையில்லாமல் அல்லது சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போதைய நிலையை விட அதிகளவிலான விஞ்ஞானத்தில் முன்னேற்றமடைந்த அக்காலப்பகுதியில் பலவகைகளிலும் பிறப்புக்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

தற்போது நாம் முன்னைய விஷயத்தை நோக்கினால் வியர்வை துளியென மச்சகன்னிபெண் கூறுவது என்னவென ஆராயவேண்டும். ஆஞ்சநேயர் முழு பிரமச்சாரி. ஆற்றல் மிக்கவர், அவரது வியர்வையில் கூட உயிர் ஆற்றல் மிகுந்து இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் இந்த கதையுடன் தொடர்புபடுகிறது. ஆஞ்சநேயப் பெருமான் மயில் இராவணனை அழித்து இராம இலட்சுமணர்களை மீட்டு வரும்போது வானர முகமுடைய மகரத்வஜனை பாதாளலோகத்தின் அரசனாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் நவீனகால ஆய்வாளர்கள் ஹொன்டூராஸ் காடுகளில் நடத்திய ஆய்வுகளில் வானரமுகம் கொண்ட ஒருவரை கடவுளாகவும், ஆட்சியாளராகவும் பின் பற்றிய நாகரீக மொன்று இருந்ததை உறுதிப்படுத்தினார்கள்.

தொலைந்து போன வானர கடவுளின் நகரமும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்படுகிறது. இங்கு வானர முகம் கொண்ட ஆட்சியாளர்களின் சிலைகள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்படுகிறது. இவற்றைஆய்வாளர்கள் ஆஞ்சநேயப் பெருமானுடன் ஒப்பிடுகின்றனர்.

ஹொன்டூராஸ் காடுகளில் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட வானர முகம் கொண்ட ஆட்சியாளர்களின் சிலைகளில் ஒன்று.

ஆஞ்சநேயர் இராம இலட்சுமணர்களை மீட்க பாதாளலோகம் சென்றதையும், அங்குவானர முகம் கொண்ட மகரத்வஜனை தனது மகன் எனஅறிந்து கொண்டதாக கூறப்படுவதையும் நாம் இங்கு சுட்டிக் காட்டலாம். உலகில் வேறெங்கிலும் கிடைக்காத குரங்கினத்தை வணங்கிய நாகரீகம் பற்றிய தகவல்கள் ஹொன்டூராஸ் காடுகளில் இருந்து கிடைக்கின்றன. இங்கு 50 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்டவானரவீரர் ஒருவர் கதாயுதத்துடன்அமர்ந்திருக்கும் சிலைமீட்கப்பட்டுள்ளது. இது மகரத்வஜன் அல்லது ஆஞ்சநேயப் பெருமானின் சிலையாக இருக்கலாம் என இதனைக் கண்ட சிறுபிள்ளையும் கூறும்.

இந்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் டக்ளஸ் பிரிஸ்டன் என்னும் ஆய்வாளர் "The Lost City of the Monkey God" என்ற தனது ஆய்வுகளின் அனுபவங்கள் அடங்கிய நூலொன்றை வெளியிட்டார். இந்த நூல் காணாமல் போன குரங்கினத்தவர் ஒருவரை மையமாக வைத்து வணங்கப்பட்ட மறைந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் பற்றி கூறுகிறது. இந்தநகரமானது ஹொன்டூராஸ் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ அருங்காட்சியகத்தில் காணப்படும், மாயன் இனத்தவர்கள் யோகநிலையில் அமர்ந்துள்ள சிற்பம்.

மேலும் மாயன் இனத்தவர்கள் யோகநிலையில் அமர்ந்துள்ள சிற்பங்களும் மெக்சிகோ அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளன. மேலும் கூறுவோமேயானால் அஷ்வமேத யாககுதிரையை இந்திரன் கபிலமுனிவரின் ஆசிரமத்தில் கவர்ந்து சென்று கட்டியதாகவும், கபில முனிவர் திருடர் என நினைத்து இளவரசர்கள் அவரை அழிக்க வந்த போது கபில முனிவர் கண் திறந்து பார்த்து தவவலிமையால் இளவரசர்களை சாம்பலாக்கினார் என்பது இந்துக்கள் புராண வரலாறு.

கபிலரின் ஆசிரமம் இருந்த பகுதி கபிலர் ஆரண்யம் என்ற அழைக்கப்பட்டு பின்னாளில் கலிபோர்னியா என தற்காலத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. யாக குதிரை கட்டிய இடம் இன்னும் ஹோர்ஸ் ஐலன்ட் என அழைக்கப்படுவதுடன் இதனை தமிழில் மொழிபெயர்த்தால் குதிரைதீவு என அழைக்கலாம். மேலும் இதற்கு அருகில் உள்ள மற்றுமொரு தீவு ஆசஸ் ஐலன்ட் என அழைக்கப்படுகிறது. இதனை தமிழாக்கம் செய்தால் சாம்பலாகியதீவு என்று பொருள்படும்.

இந்துக்களின் கதையிலும் இளவரசர்களை சாம்பலாக்கியதாக கூறப்படும் இடமாக இது இருக்கலாம். மேலும் தமது முன்னோர்களுக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்பதற்காக இவர்களது வம்சத்தில் வந்த பகீரதன் என்னும் மன்னன் ஆகாய கங்கையை பூமிக்கு சிவனின் துணையுடன் இறக்கியதாக கூறப்படுகிறது. பகிரதனின் கடும் தவத்தினை இன்றும் நாம் கடும் முயற்சிக்கு ஒப்பீடாக கூறுகின்றோம். கடுமையான முயற்சிகளை பகீரதபிரயத்தனம் என்று கூறுவது நமது மரபு. தமிழில் காரணப்பெயர்கள் அதிகம் காணப்படுவதுடன் இந்தகாரணங்களை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவருவது உறுதி. தொடர்ந்து அடுத்த வாரம் பார்ப்போம்.



ஹொன்டூராஸ் காடுகளில் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட வானர முகம் கொண்ட ஆட்சியாளர்களின் சிலைகள்.

Tags

Next Story