குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் குரு பகவான்
நவகிரங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரா் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு புதன்கிழமை பெயா்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடியில் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த ஏப். 26-ஆம் தேதி தொடங்கி, 28-இல் நிறைவடைந்தது.
நாளை புதன்கிழமை (மே 1) நடைபெறவுள்ள குருப்பெயா்ச்சி விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொள்வா் என்பதால், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய தகரத்தாலான பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
2-ஆம் கட்ட லட்சார்ச்சனை மே 6-இல் தொடக்கம்:
குருப்பெயா்சிக்குப் பின்னா் மே 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. லட்சார்ச்சனை காலை 9.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடைபெறும்.
ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராமு, கோயில் செயல் அலுவலா் எம். சூரியநாராயணன் ,கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன் மற்றும் பணியாளா்கள் செய்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu