நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி - கருடாழ்வார் ஆணவத்தை அடக்கிய மாயன்
கருடாழ்வார் ஆணவத்தை அடக்கிய மாயன்- நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி
கருடாழ்வார் ஆணவத்தை அடக்கிய மாயன் நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி
தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள சனிக்கான பரிகாரத் தலமான பெருங்குளம் மூன்று அடுக்குகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. திருக்குளந்தை என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெருங்குளம் கோயிலை மக்கள் வழக்கில் பெருங்குளம் என்றே அழைக்கின்றனர். இந்த ஊர் நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதியாகும் இந்த திருத்தலம், திருநெல்வேலியிலிருந்து இருந்து திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ தூரத்திலும், ஸ்ரீவைகுண்டம் தலத்தில் இருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமான். திருவேங்கடமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இங்கு வைகானச ஆகமப்படி பூஜை நடைபெறுகிறது கோவிலின் அருகில் உள்ள பெரியகுளத்தின் நீரே இத்தலத்தின் தீர்த்தம் ஆலய உற்சவர் அழகிய ஸ்ரீமாயக்கூத்தர். தேவிகள் ஸ்ரீகமலாவதி ,ஸ்ரீ குழந்தைவல்லித் தாயார். இங்கு மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது.
ஒருமுறை தாடக வனம் என்ற பெருங்குளத்தில், விப்ரகுலத்தைச் சேர்ந்த வேத விற்பன்னராக வேதசாரன் அவரது மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து வந்தார். பெருங்குளத்து பெருமானை வணங்குவதையே முதன்மையான கடமையாகக் கருதி எந்நேரமும் வாழ்ந்து வந்தார். இதனால் அந்த தம்பதிகளுக்கு அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார்.
மகளை கமலாவதி என்ற பெயரோடு தம்பதியினர் வளர்ந்து வந்தனர் பெருமாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, பித்தாகி, அந்த திருமாலையே திருமணம் செய்து கொள்ள விரும்பிய கமலாவதி ஆண்டாளைப் போல "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே", என்று வைராக்கியத்துடன் பெருமாளையே மணப்பேன் என்று, பெற்றோர் உற்றார், உறவினர், கூறியும் கேளாமல் வனம் சென்று தவம் புரிந்து மாயக்கூத்தனை காதலனாகப் பாவித்து பாசுரம் பாடினார்
இந்நிலையில் இமயமலையில் தீய குணங்களைக் கொண்ட சோரன் எனும் அரக்க குணம் கொண்ட முனிவன் ஒருவன், சாகாவரம் பெற 1,000 அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் ஒரே சமயத்தில் 998 பெண்களைக் கவர்ந்து சென்றான். ஒரு நாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி குளத்திற்க்கு நீராட சென்ற போது அவளையும் கவர்ந்து கொண்ட அரக்க குணம் கொண்ட முனிவன் இமயம் சென்றான். இதனால், மனம் நொந்த வேதசாரன் பூச நட்சத்திரத்துடன் கூடிய ஒரு தை பௌர்ணமியன்று கலச தீர்த்தத்தினால் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, பெருமாளே! "அடியேன் மனையாளை ஒரு அவுணன் அபகரித்துச் சென்று விட்டான், மனைவி இல்லாதவன் ஒரு கர்மத்திற்கும் பாத்திரவானல்லன் எனவே அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.
இந்நிலையில் தன் துணை இன்றி திருமால் இமயத்திற்கு நகரவே முடியாது என்று கருடாழ்வார் ஆணவத்துடன் இருப்பதை அறிந்த இறைவன் கருடனின் கர்வத்தை அடக்க நினைத்து அவரை தமது கால்களின் இடையில் வைத்துக் கொண்டு, அழுத்திய படி பறந்து சென்று பக்தனின் மனைவி குமுதவதியை மீட்டு திரும்பியதுடன் அவணது ஆயவத்தை அடக்கினார் ஏற்கனவே ஒருமுறை கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைந்தான் இதனை பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, கருடனை வழி மறிக்க அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதி இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன் பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்து விடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.
விஷ்ணு கருடனின் வீரத்தை எண்ணி வியந்து அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருத யுத்தம் ஆரம்பமானது. ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும் போது, தான் தோற்றுப் போவது போல நடிப்பது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பது போல நடித்துக் கொண்டு, அவனுடன் போர் செய்து கொண்டிருந்தார். 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தேவலோக அமிர்தத்தை எடுத்தது தர்மமாகாது நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடன் நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் என்றான் மகாவிஷ்ணு அப்போது என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவற மாட்டாயே? என்று கேட்க நான் வாக்குத் தவறமாட்டேன் என்றான் கருடன்.
அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணி புரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு. மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக்கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள் கருடனுக்குக் கிடைத்தன.
இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு உற்சவர் மற்றும் உபயநாச்சியர்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள். கருடன் இங்கே சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் பறக்கும் கோலத்தில் ஆடல் பறவையாகக் சேவை சாதிக்கின்றார். இத்திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறு நாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகின்றது. இத்தலத்தைப் மங்களாசாசனம்ச் செய்த நம்மாழ்வார் " ஆடல் பறவை" என்று கருடனையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
தோல்வியடைந்த அந்த முனிவன் தலத்துக்கே நேரில் வந்து போர் புரிய பெருமாளும் அவனை அடக்கி அவனுடைய தலையின் மீது கால் தடம் பதித்து, நடனம் ஆடினார். அரக்கனுடன் போரிட்டு அவனைக் கீழே தள்ளி, அவன் தலை மீது ஆனந்தக் கூத்தாடினார் பெண்களைத் திருடிய சோரன் மீது நாட்டியமாடியதால் சோர நாட்டியன் என்றும், பெருமாளின் திருவடிபட்டதால் அந்த முனிவன் கந்தர்வனாக மாற அற்புத நாட்டியம் ஆடிய பெருமாள், தேவர்களால் மாயக்கூத்த பெருமாள் எனவும் வணங்கப்பட்டார் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்க வேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாக ஐதீகம். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்
இதனிடையே கமலாவதி தவத்துக்கு இரங்கிய மாயக்கூத்தர் தன் கெளஸ்துப மாலையுடன் கமலாவதியை ஆலிங்கனம் செய்து கொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி பூச நட்சத்திர நாளில் கல்யாணம் செய்து கொண்டார் தேவர்கள் பூமாரி பொலிந்தனர். பாலிகை தவம் செய்த இடமாதலால், 'பாலிகைவனம்' என்ற பெயருடைய வேண்டும் என்று தேவர்கள் வேண்டினார்கள். வேதசாரனும் தன் செல்லப்புதல்வியை பெருமாள் தனது மார்பில் தாங்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து பெருமாளை பூசித்தார் இத்தலத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அங்கு ஆண்டாள் திருவவதாரம் செய்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள். அதே போல இங்கு கமலாதேவி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கும் ஆண்டாள் அரங்கமன்னார் கருடன் ஏக சிம்மாசனம். இங்கும் மாயக்கூத்தர் உபய நாச்சியார்கள் கருடன் ஏக சிம்மாசனம்
இங்கு எம்பெருமான் சனி பகவானின் அம்சத்தை தன்னுள் தாங்கி அருள் பாலிப்பதால் இங்குள்ள பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும் விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள் யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம் என்கிறது திருத்தல புராணம். எனவே சனிப்பெயர்ச்சி அன்று இங்கு லட்சக்கணக்ககில் பக்தர்கள் குவிவதை கண் குளிர கணடு மகிழலாம் . பங்குனி திருவோண நட்சத்திரத்தன்று பிரம்மோற்ஸவம் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. 11வது நாள் தீர்த்தவாரி நடைபெறும்.
மற்ற பாண்டிய நாட்டித் திவ்ய தேசங்களைப் போலவே இத்திருத்தலத்திலும் கற்சிற்பங்களின் பேரழகு கண்ணையும் மனதையும் கவர்கிறது. குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது.
"மாயக்கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழ்தா
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே!"
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu