ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து பூஜை

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார்அட்டை, பஞ்சாங்கம், பத்துரூபாய் வைத்து பூஜை
X

சிவன்மலை முருகன் கோயில்

சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜைசெய்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருளை கோயில் மூலவர்அறைக்கு முன்பாக கல்தூணில் உள்ள கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இதனை தரிசித்து வழிபட, பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள்.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சிவ வாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு பார்த்து அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த பக்தர் லதா என்பவரின் கனவில், பஞ்சாங்கம், ஆதார்கார்டு, மணி, 10 ரூபாய் நாணயங்கள் வைத்து வழிபாடு நடத்த உத்தரவு வந்துள்ளது. பக்தர் லதா இன்று கோவிலுக்கு வந்து தகவல் தெரிவித்தார். அதன் பேரில், ஆண்டவனிடம் உத்தரவு கேட்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆதார் அட்டை பஞ்சாங்கம் பத்து ரூபாய் காசு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நாகேஸ்வரி (31) என்ற பெண் பக்தரின் கனவில் வந்ததாகக் கூறி, வேப்பிலை, துளசி,வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய 6 பொருட்கள் வைக்கப்பட்டு நேற்று வரை பூஜை செய்யப்பட்டது.

Tags

Next Story