சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் ஒரு பிடி நெற்கதிர்

சிவன்மலை கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிடி நெற்கதிர்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், ஒரு பிடி நெற்கதிர் வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் விவசாயம் செழித்து, நாடு வளம் பெறும் என்பதையே சிவன் மலை ஆண்டவன் சுட்டிக்காட்டுவதாக , பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள, 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' பெரும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள 'ஆண்டவன் உத்தரவு பெட்டி'யில் அவ்வப்ப்போது ஒரு பொருள் வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த கோவிலில் அருள் பாலிக்கும் முருகன் பக்தர்களின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டி காட்டுவார் என்றும், அது குறித்து அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தில் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபர் கூறும் தகவல் உண்மையா? என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் மூலவரிடம் பூப்போட்டு பார்த்து உத்தரவு பெறப்படுகிறது. இதன் பிறகு அந்த பொருள் 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' யில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க வேண்டிய அடுத்த பொருள் குறித்து, வேறு ஒருவருடைய கனவில் வந்து, முருகன் சொல்லும் வரை அந்த பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியிலேயே இருக்கும். அதே வேளை, சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் எவ்வித பொருளுக்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது என, பக்தர்கள் மற்றும் கோவில் சார்பில் கூறுகின்றனர்.
இதன்படி கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பெட்டியில் இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஆண்டவன் பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
முந்தைய காலங்களில் துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது என்றும், மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பெண் பக்தர் ஒருவருக்கு கனவில் வந்து முருகப்பெருமான் கூறிய உத்தரவின்படி ஆண்டவன் உத்தரவு பெட்டி பூஜை பொருள் மாற்றப்பட்டு, ஒருபிடி நெற்கதிர் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் தாக்கம் வரும் நாட்களில் தெரியும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பொங்கல் பண்டிகை நாளில் அறுவடை செய்த நெற்கதிர்களில் இருந்து புதிய அரிசி எடுத்து பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு பிறந்து, பொங்கல் பண்டிகை கொண்டாடிய நிலையில் நெற்கதிர்கள் வைக்க ஆண்டவன் உத்தரவு அளித்துள்ளது விவசாயம் செழித்து நாடும் வளம் பெறும் என்பதையே சிவன் மலை ஆண்டவன் சுட்டிக்காட்டுவதாக பெரிதும் நம்பப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu