Siruvapuri Murugan Kovil- உங்களுக்கு சொந்த வீடு ஆசை இருக்கா? சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்யுங்க!

Siruvapuri Murugan Kovil- சிறுவாபுரி முருகன் கோவில் பெருமைகளை அறிவோம் (கோப்பு படங்கள்)
Siruvapuri Murugan Kovil- சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன்.
ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.
சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.
சிறுவாபுரி முருகன் கோவில் வரலாறு
முருகப் பெருமான் வள்ளி தேவியை திருமணம் செய்து கொண்டப் பின் தம் மனைவியுடன் கிளம்பி தம்முடைய இடத்துக்குச் செல்லத் துவங்கினார். முருகப் பெருமானுக்கு எப்போதுமே சோலைகள் மிகுந்த இடம் மனதுக்கு பிடித்த இடமாக இருக்கும். அவர் சென்று கொண்டு இருந்த நேரத்தில் ராமாயண யுத்தம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய ராமபிரானைப் பிரிந்து சீதையானவள் ஒரு வனப்பகுதியில் தனது இரண்டு குழந்தைகளான லவ-குசாவுடன் தங்கி இருந்தாள். அந்த நேரத்தில்தான் பாலக் குமாரராக இருந்த முருகப் பெருமானும் தனது மனைவியான வள்ளியுடன் அதே வனப் பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். அந்த இடமே சிறுவாபுரி என்பதாக மாறியது
ஒருவகையில் பார்த்தால் வள்ளி தேவியும் மகாவிஷ்ணுவின் இரண்டாவது மகள் ஆனவள். அவள் முருகப் பெருமானை மணப்பதற்காக ஒரு வேடனின் மகளாகப் பிறந்து அவரை மணந்து கொண்டவள். ஆகவே முருகனுடன் தனது இளைய மகளான வள்ளி புகுந்த வீட்டிற்குச் செல்வதைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் அதே இடத்துக்கு வந்திருந்தார். அது போலவேதான் சிவபெருமானும் திருமணம் ஆனப் பின் தம் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்த தமது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக அங்கு வந்து இருந்தார்.
அங்கு தங்கி இருந்த நேரத்தில் சிவபெருமானும், விஷ்ணுவும் பேசிக் கொண்டு இருக்கையில் விஷ்ணு கூறினாராம் ‘ இந்த இடம் நமது பாலகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைய வேண்டும். அதற்குக் காரணம் ராம அவதாரத்தில் இருந்த நான் (விஷ்ணுவானவர்) என் மகன்களின் வீரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக நானே அனுப்பிய அஸ்வமேத யாக குதிரையை பிடித்து வைத்து இருந்த எனது மகன்களான லவ- குசாவுடன் இதே இடத்தில் போர் புரிய நேரிட்டது. அதில் நான் வெற்றி பெற முடியாமல் போக சீதை மூலம் லவ குசா யார் என்பதை தாம் அறிந்து கொள்வது போல நாடகம் நடத்தி உலகிற்கு அவர்களை அடையாளம் காட்ட முடிந்தது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இடத்தில் எனது மகளை (வள்ளி) மணந்து கொண்ட முருகனும் (சிவபெருமானின் மகன்) எழுந்தருளி இந்த இடத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் திருமணக் கோலத்துடன் வள்ளியுடன் திரும்பிச் சென்று கொண்டு இருந்த முருகனை சந்தித்து விஷ்ணுவின் ஆசையைக் கூறி, அதை மதிக்கும் விதத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேறியவாறு அவர்களை ரட்ஷித்து வருமாறு கூறி அவருக்கு பல சக்திகளை தம்மிடம் இருந்து தந்தார். தந்தையின் சொல்லை ஏற்று முருகப் பெருமானும் தமது வாகனங்கள் மற்றும் தன்னுடன் திரும்பிக் கொண்டு இருந்த அனைவருடனும் அங்கேயே சில காலம் தங்கி இருந்தார். அதுவே அங்கு முருகன் ஆலயம் ஏற்படக் காரணம் ஆயிற்று என்பது மட்டும் அல்ல அந்த அன்றைய வனப் பகுதியிலேயே விஷ்ணு மற்றும் சிவனுக்கும் ஆலயங்கள் ஏற்படக் காரணம் ஆயிற்றாம் . இது ஒரு சிலர் கூறும் கிராமியக் கதை.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போர் புரிந்த இடம் என்பதினாலும், பால வயதுக் குமாரன் தீரச் செயலை செய்து வள்ளியை கரம் பிடித்து வந்து தங்கிய இடம் என்பதினாலும், சிறு இளைஞர்கள் பெருமை சேர்த்த அந்த வனப்பகுதி -சிறுவர்கள் + வாய் + புரி = ‘சிருவாய்புரி’ – அதாவது அனைவரும் வாயும் பிளக்கும் வண்ணம் தீரமிக்கக் செயலை காட்டிய இடம் என்ற அர்த்தத்தில் ‘சிருவாய்புரி’ என்ற பெயரில் அமைந்தது. ஆனால் காலப் போக்கில் அது மருவி சிறுவாபுரி என ஆகி விட்டதாம்.
சிறுவாபுரி கிராமத்தில் மூன்று ஆலயங்கள் இருந்தும், லவ-குசர்கள் பெருமை பெற்று இருந்தாலும், அங்கு அமைந்து உள்ள முருகப் பெருமானின் ஆலயமே பெரும் பெருமைப் பெற்ற ஆலயமாக உள்ளது. அதற்குக் காரணம் இங்கு அமர்ந்துள்ள முருகப் பெருமான் பல சக்திகளைக் கொண்டவர் லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளனர்.
வள்ளியுடன் திருமண ஜோடியாக இங்கு வந்து முருகன் தங்கியதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும்.
நல்ல தங்கும் இடம் அமையும் (வீடு, நிலபுலங்கள் வாங்குதல்)
நோய் நொடிகள் விலகும் மற்றும்
செல்வம் சேரும்
இது அருணகிரிநாதர் பாடல் பெற்றத் தலம்
இந்த கிராமத்தில் முருகம்மை என்ற பெண்மணி இருந்தாள். அவள் முருக பக்தை. எப்போதும் முருகனையே போற்றி வணங்கி வந்தால். அதனால் ஒருநாள் அவள் மீது ஆத்திரம் அடைந்த அவளுடையக் கணவன் அவளது கையை வெட்டி எறிந்தான். அவள் அழுதுகொண்டே முருகனை வேண்டினாள். அவளது கணவனின் செயலினால் வருத்தம் அடைந்த முருகன் அவளுக்கு அங்கேயே காட்சி அளிக்க வெட்டப்பட்ட அவளாது கைகள் அப்படியே உடலுடன் இணைந்தது. வெட்டப்பட்ட சுவடே இல்லை. இது உண்மையில் நடந்தக் கதை என்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட முறையில் ஆறுவாரங்கள் முருகனை இங்கு வந்து வணங்கினால் நினைத்தவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு விசித்திரம் என்ன என்றால் இங்குள்ள அனைத்து சிலைகளும் – மூலவரைத் தவிர- பச்சை நிறக் கல்லில் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள சன்னதிகள் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்றவர்களுக்கு உள்ளன. இங்குள்ள கொடி மரத்தின் முன்னால் முருகனின் வாகனமான பெரிய பச்சை வண்ண மயில் உள்ளது விஷேஷமானக் காட்சியாகும்.
ஆலயம் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறுவாபுரிக்குச் செல்ல பஸ்கள் உள்ளன, தனி வாகனத்திலும் செல்லலாம். சென்னையில் இருந்து இந்த ஆலயம் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
குறிப்பு: செய்தியில் இடம்பெற்றவை அனைத்தும் கோப்பு படங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu