லிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரம் நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி என்னும் ஊரில் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் திருமங்கலக்குடி உள்ளது. திருமங்கலக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இதுவாகும்.
இத்தலத்தில் அம்மன் மங்களாம்பிகை என்கிற மங்களநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார். மாங்கல்ய தோஷமும், ராகு, கேது, சனி முதலிய கிரக தோஷங்களும் விலக தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் மங்களாம்பிகையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தில் இரவில்தான் திருக்கல்யாணம் நடைபெறும்.
இத்தலத்தில் பங்குனி உத்திரம் பத்து நாட்கள் கொண்டாப்படுகிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் இக்கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.
இத்தலத்தில் சத்ருபயம் நீங்க, நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
இத்தலத்தில் அம்மனுக்கு திருமாங்கல்யமும், புடவையும் சாற்றுகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும், 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குவதை நேர்த்திக்கடனாக செய்கிறார்கள்.
சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu