ஆறு ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம்...! (தொகுப்பு - 1)

Sani Peyarchi Tamil
X

Sani Peyarchi Tamil

Sani Peyarchi Tamil-மேஷம், ரிஷபம், கன்னி, மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்களை இங்கு காண்போம்.

Sani Peyarchi Tamil-கடந்த 17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 4 நிமிடத்தில் கும்ப ராசிக்குள் சனிபகவான் அமர்ந்தார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில் காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் குடி பெயர்ந்த நிலையில், வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் 29.03.2023 அன்று மாறுகிறார்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்):

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட குப்பத்தில் தலைவனாய் இருப்பதை விரும்புவீர்கள். எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை, குறிக்கோளை விட்டு விலகமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

எதிலும் ஆர்வம் பிறக்கும். குழந்தையில்லா தம்பதியருக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் சற்று உடல் நலம் பாதிக்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

உங்கள் பாக்ய-விரயாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். மகளின் கல்யாணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும், உத்தியோகத்தில் உயர்வும் உண்டாகும்.

இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாய நாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும், எடுத்த வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனி பகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தம-விரயாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீடு, மனை சேரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்.

உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திடீர் செல்வாக்கும், பணப்புழக்கமும், தங்க ஆபரண சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள்.

இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாகவும், சலிப்பாகவும் இருந்தீர்களே! இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயரும். சம்பளம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சினைகளால் நிலைக் குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும்.

வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே, ராசிக்கு 10-ம் வீட்டில் சனி வந்து அமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

இந்த சனி மாற்றம் குடத்தில் இட்ட விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வசதி பெருகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தும் அளவுக்கு பட்டறிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள் காசு பணத்துக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். இனி ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும்-லாபாதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்ப்பதற்கு புது வழி பிறக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். தொண்டை புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு சொந்தத்திலேயே நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும்.

இல்லத்தரசிகளே! தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். மாமனார், மாமியாருடனான கருத்துமோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களே! விரைவிலேயே திருமணம் நடைபெறும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளே, மற்றவர் களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும்.

இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. சமையல் முதல் விஞ்ஞானம் வரை அனைத்தையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வர வேண்டிய பூர்விக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள்.

இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் இனி நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! விரைவில் திருமணம் முடியும்.

வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.

உத்தியோகஸ்தர்களே, நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

இந்த சனி மாற்றம் செலவுகளிலும், பிரச்சினை களிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்):

எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற்கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாக கையாளுங்கள். மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின்பொருட்டு குடும்பத்தை பிரியவேண்டி வரும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்று வழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - அட்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் பிள்ளை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.

இல்லத்தரசிகளே! கணவரின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! சக ஊழியர்களை விமர்சித்து பேசவேண்டாம். வேலைப் பளு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கன்னிப் பெண்களே! எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோ சிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி-பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும்.

உத்தியோகஸ்தர்களே, முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சினைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

முயற்சியை முதுகெலும்பாக கொண்டவர்களே. குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே. எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். பணம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார். மனஇறுக்கம், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப்பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.

மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியஸ்தானாதிபதியும் - அஷ்டமாதி பதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் சனிபகவான் செல்வதால் வீடு மாறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

இல்லத்தரசிகளே! தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களை நம்பி மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

வியாபாரிகளே, அதிரடி லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே, இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.

( மற்ற ஆறு ராசிகளின் தொடர்ச்சி உள்ளது)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!