ஏப்ரல் மாதம் 19 ம் தேதி இன்று சங்கடஹர சதுர்த்தி-விநாயகரை வணங்குவோம்

இன்று சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர.. வணங்குவதற்கு எளியவராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருக்கும் விநாயகரை வணங்குவோம்..!!
வணங்குவதற்கு எளியவராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். விநாயகர் என்ற சொல்லுக்கு 'தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்" என்று பொருள். விநாயகரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும், சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம் ஆகும். அப்படியான சங்கடஹர சதுர்த்தி விரதத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..
இன்றைய தினம் (19.04.2022) செவ்வாய்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கபடுகிறது. சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக 'திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.
'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு 'சங்கட"மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது. நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்தபோது, அவர்கள் விநாயகரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.பின் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும்.
விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
இந்த சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்தால் ஒரு வருடம் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணத்திற்காக காத்திருப்போர் இந்த விரதம் இருந்தால் திருமணம் நடக்கும். இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu