சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு.. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 இல் நடை திறப்பு…
சபரிமலையில் இன்று நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தினமும் நடை திறக்கப்படுவது உண்டு.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் கொண்ட மண்டல காலம் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு வருடங்களாக கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கடந்த 40 தினங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று பிற்பகல் 12.30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இதற்காக 145 பவுன் தங்க அங்கி அணிவிக்கப்பட்ட ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.
கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு மண்டல பூஜையில் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் பங்கேற்றனர். மண்டல பூஜையை காண்பதற்காக முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் மண்டல பூஜை நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை நிறைவடைந்ததும் மகா தீபாராதனை காட்டப்பட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு இன்று இரவு 11:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இத்துடன் 41 நாள் மண்டல பூஜை காலம் முழுமையாக நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20 ஆம் தேதி நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu