சபரிமலைக்கு செல்கிறீர்களா.. மஞ்சமாதா கோயிலில் மறக்காமல் வழிபடுங்கள்..
மஞ்சமாதா கோயில்.
கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நவம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 8,79,905 பேர் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு செய்து உள்ளனர்.
தற்போது ஆன்லைன் முன்பதிவுகள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1,20,000 முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. தற்போது, ஆன்லைன் முன்பதிவுகள் மட்டுமே 90 ஆயிரம் வரை இருப்பதால் முன் பதிவு செய்யாமல், நேரடி புக்கிங் மையங்கள் மூலம் பதிவு செய்வோர் மற்றும் நடைபயணமாக சபரிமலைக்கு வருவோர் என்று நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் ஐயப்பனை தரிசனம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மஞ்சமாதா கோயில்: சபரிமலைக்கு வந்து அய்யப்பனை வழிபடும் பக்தர்கள், அதற்கு அடுத்தபடியாக மஞ்சமாதா என அழைக்கப்படும் மாளிகைபுரத்து அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் கோவில் ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் 300 அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோயில் அமைந்துள்ளது. அய்யப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.
மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண் ஒருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி 'நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், என வேண்டினாள்.
அய்யப்பன் அவளிடம், நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்து உள்ளேன் என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோயிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அய்யப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்து அம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
வழிபாட்டு முறை: சபரிமலை செல்லும் பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள். மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார்.
மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைப்பது மரபு. சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள்.
அந்த இசையை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. உள்ளுவன் புள்ளுவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி மத்திய இசை பக்தர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu