Sabarimala Ayyappan Temple-சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவில் (கோப்பு படம்)
Sabarimala Ayyappan Temple, Swami Darshanam- கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க, அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தை மாதம் வரை மூன்று மாதங்கள், தொடர்ந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்த நாட்களில், விரதம் இருக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி, பெருவழிப்பாதையில் பயணம் செய்தோ, அல்லது பம்பை வழியாகவோ சென்று, 18 படிகள் ஏறிச்சென்று, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். மற்ற மாதங்களில், முதல் வாரத்தில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பு; செய்தியில் இடம்பெற்றவை கோப்பு படங்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu