Sabarimala Ayyappan Temple- நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை - சபரிமலை கோவிலில் வரும் பிப்ரவரி 13ல் நடை திறப்பு!
Sabarimala Ayyappan Temple- சபரிமலையில் வரும் பிப்ரவரி 13ல் மீண்டும் நடை திறப்பு. (கோப்பு படம்)
Sabarimala Ayyappan Temple- திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகளவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில் இன்று காலையில் நடை அடைக்கப்பட்டது. இனி பிப்ரவரி மாதம் 13ம் தேதி தான் மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் சுவாமி பக்தர்கள் விரதம் தொடங்கி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.
அந்த வகையில் கடந்த கார்த்திகை மாதத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் தொடங்கி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
முன்னதாக கார்த்திகை மாதம் 1-ம் தேதியன்று மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கின. டிசம்பர் 27ம் தேதி வரை மண்டல பூஜைகள் கோவிலில் நடந்து வந்தது. இதில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு நடை அடைக்கப்பட்டது.
அதன்பிறகு 2 நாள் கழித்து மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. அதாவது டிசம்பர் 30ம் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் பொங்கல் தினமான கடந்த 15ம் தேதி நடந்தது.
மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகும் கூட பக்தர்கள் கூட்டம் என்பது குறையவில்லை. தொடர்ந்து பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கடந்த 18ம் தேதி வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர். நேற்றுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.
இதையடுத்து நேற்று இரவு 10 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று அதிகாலையில் திருவாபரணம் அடங்கிய பெட்டகங்கள் பந்தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்பிறகு பந்தளம் மன்னர் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் நடை அடைக்கப்பட்டது.
முன்னதாக நெய் தேங்காய் எரிக்கப்பட்டு ஆழியில் தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 13ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு மாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu