ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் துவக்கம்
X
கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் ரங்கநாச்சியார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் துவங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா துவங்கி உள்ளது. சிவனுக்கு சிவராத்திரி என்றால் அவரது தேவியான பார்வதி தேவிக்கு நவராத்திரி. சிவராத்திரி மகாசிவராத்திரியாக வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் நவராத்திரி விழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறும். தீமையை அழிக்கும் விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. துர்கா பூஜை, தசரா விழா என பல பெயர்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி வட்டார மொழிகளின் பெயரில் இந்த விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அம்மன் கோவில்கள் மற்றும் சிவன் ஆலயங்கள் உள்ளிட்ட சைவ ஸ்தலங்களில் மட்டும் இன்றி மகாலட்சுமி வீற்றிருக்கும் வைணவ ஸ்தலங்களிலும் பிரமோத்சவம் என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பூலோக வைகுண்டம், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அதாவது ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று (15ம்தேதி) தொடங்கியது.

உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.45 மணிக்கு தொடங்கி இரவு 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

தொடர்ந்து, 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8-ம் திருநாளான 22ம் தேதி ஆகிய நாட்களில் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 21-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. 23ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா 23-ம்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!