/* */

ஊரின் பெருமையும் ஆன்மீகமும் - கயிலையே மயிலை, மயிலையே கயிலை-மயிலாப்பூர்

கல்யாண வரம், குழந்தை வரம் மட்டுமன்றி ஆரோக்கியமான, வளமான வாழ்வு, குடும்ப மகிழ்ச்சி வேண்டுமானல் இந்த மயிலாப்பூரில் குடியிருக்கும் அம்மை அப்பனை பாருங்கள்.

HIGHLIGHTS

ஊரின் பெருமையும் ஆன்மீகமும் - கயிலையே மயிலை, மயிலையே கயிலை-மயிலாப்பூர்
X

மயிலாப்பூர்

கல்யாண வரம், குழந்தை வரம் மட்டுமன்றி ஆரோக்கியமான, வளமான வாழ்வு, குடும்ப மகிழ்ச்சி வேண்டுமானல் இந்த மயிலாப்பூரில் குடியிருக்கும் அம்மை அப்பனை பாருங்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமையும் ,மகத்துவமும் உண்டு. அந்த வகையில் மயிலாப்பூர் என்றதும் நம் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரரும், அன்னை கற்பகாம்பாளும் தான். மைலாப்பூரில் குடியிருக்கவே பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று இங்கிருப்பவர்கள் எண்ணி பூரிக்கும் அளவிற்கானது கபாலிக்கும் மயிலாப்பூர் மக்களுக்குமான தொடர்பு. "கயிலையே மயிலை, மயிலையே கயிலை' என்று இந்தத் தலத்தைப் போற்றி கொண்டாடுகின்றன புராணங்கள். மயில் ஆர்ப்பு ஊரே பின்னாளில் மயிலாப்பூர் என்றானது.


மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள் கொள்ளும்படியான இந்த தலம், சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 257 ஆவது தேவாரத்தலம் ஆகும். அது மட்டுமின்றி அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் நாயனார் தோன்றிய தலம் என்ற சிறப்பையும் பெறுகிறது.

இங்கு உமையவள் மயிலாக வந்து ஈசனை வழிபட்டதால் 'மயிலை'என்று அழைக்கப்படுகிறது. சோமுக என்ற கொடிய அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு கொண்டு வந்து இங்கு சேர்த்ததால் இதனை 'வேதபுரி'என்றும் கூறுவார்கள்.அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், இங்குள்ள ஈசனை வழிபட்டு, அவர் அருளுக்கு பாத்திரமானதால் 'சுக்ரபுரி' என்று சிறப்பு பெறுகிறது. நான்முகனுக்கு, ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் மேலிட்டதால், பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால்,'கபாலீஸ்வரர்' எனும் திருப்பெயருடன் சிவனார் போற்றப்பட, அந்த பெயராலேயே இந்த ஊர் கபாலீச்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு முறை உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையையும், பிரணவத்தின் மகிமையையும் விளக்கிட வேண்ட, சிவபெருமான் அம்மைக்கு அவ்விளக்கத்தினை எடுத்துரைக்கிறார். அப்போது அங்கு அழகிய மயிலொன்று தோகை விரித்தாடி,தேவியின் கவனத்தை கவர்ந்தது. ஈசனின் விளக்கத்தை கவனியாமல் தமது கவனத்தை அழகிய மயிலின் மீது அன்னை செலுத்த, அதனால் கோபமுற்ற ஈசனும் , மயிலின் மீது கொண்ட மையலால், நீ பூவுலகில் மயில் உருப்பெற்றிடுவாய் என சாபமிட்டார். பின் அன்னையின் வேண்டுதலுக்கு மனமிரங்கி,சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்யும்படி கூறினார். அதன்படி இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து அம்பிகை வழிபட்டார். அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் ஒரு தைப்பூசத்தன்று, காட்சியளித்து சாப விமோசனம் தந்தருளி, அவளுக்கு 'கற்பகாம்பாள்' என பெயர் சூட்டினார் என்கிறது தல வரலாறு.


திருமயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்ற வணிகர் மிகுந்த சிவபக்தர். இவரின் மகள் பூம்பாவை, ஒரு நாள் பூப்பறிக்கச் சென்றபோது பூநாகம் ஒன்று தீண்டியதால் இறந்துவிட, பூம்பாவையின் உடலை தகனம் செய்தபின், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்தார் சிவநேசர். இந்த நிலையில், திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வருவதையறிந்த சிவநேசர், அவரிடம் சென்று வணங்கி, தன் மகளுக்கு நிகழ்ந்ததைத் தெரிவித்தார்.

சிவபக்தருக்கு ஏற்பட்ட துயரத்தைக் கேட்ட சம்பந்தரும் , திருமயிலை வந்து, ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கி, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை இறைவனின் முன் வைத்து, "மட்டிட்ட புன்னையங் கானல்...' என்ற திருப்பதிகத்தைப் பாடி, பூம்பாவையை உயிர்பித்தார். பூம்பாவையை மணக்கும்படி வேண்டிய சிவநேசரிடம், தாம் உயிர் கொடுத்ததால் தன் மகளாகவே அவளை நினைப்பதாகச் சொல்லி ஆசீர்வதித்து சென்றார் சம்பந்தர். பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளன்று காலையில், பூம்பாவையை ஞானசம்பந்தப் பெருமான் உயிர்ப்பித்ததைக் குறிக்கும் வகையில் பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்னையை தாய் கற்பகாம்பாள் என்றே அழைக்கின்றனர் அவளின் பிள்ளைகள். பெயருக்கு ஏற்றாற்போல் கேட்பவர்களுக்கு அருளினை வழங்குவதில் கற்பகத் தரு அவள். கோயிலின் மேற்கு பிரகாரத்தில் அன்னை கற்பகாம்பாள் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்காட்சி தருகிறார்.ஆரத்தி ஒளியில் மின்னும் மூக்குத்தியுடன் அருள் பொங்கும் அன்னையின் திருமுகத்தை காண்பவர்களின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க மறந்து அங்கேயே நிலைத்து நின்று விடும்.

மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் இந்த ஈஸ்வரனை தரிசிப்பவர்களுக்கு ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஈசனைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும், எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். ஈசனை கண்ட மாத்திரத்தில் கபாலி கபாலி என்ற கூக்குரல் நம் காதுகளின் வழியே, நரம்புகளில் பாய்ந்து மூளைக்கு எட்டும் போது,உடலில் ஏற்படும் சிலிர்ப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். சிவனுக்கு எதிரில் நந்தி தேவர்,பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது.

கபாலீஸ்வரர் என்றதும் அடியவர்களின் மனதில் தோன்றும் முக்கிய திருவிழா பங்குனிப் பெருவிழா, அறுபத்து மூவர் திருவிழா. திருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேரில் கபாலீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார்.

மக்கள் வெள்ளத்தில் திருவீதியுலா வரும் எம்பெருமானுடன் , 63 நாயன்மார்களும் பவனி வரும் அழகைக் காண இரு கண்கள் போதாது. எம்பெருமானை காண வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வீதி எங்கிலும் அன்னதானமும், தண்ணீர்ப்பந்தலும் நடைபெறும். மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவை தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.

கோவில் வாயிலில் நுழைந்தவுடன் காணப்படும் நர்த்தன விநாயகறும் அவர் தம்பி சிங்கார வேலரும் தாய் தந்தையரைப் போலவே தங்களை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார்கள். கல்யாண வரம், குழந்தை வரம் மட்டுமன்றி ஆரோக்கியமான, வளமான வாழ்வு, குடும்ப மகிழ்ச்சி என்று பிராத்தனை எதுவாக இருந்தாலும் இந்த திருத்தலம் வந்து அம்மை அப்பனை வணங்கி கேட்டால், கேட்டது கேட்டபடி கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்...

Updated On: 22 July 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்