பஞ்ச லிங்கத்தலம்.32 தீர்த்தங்கள் கொண்ட மகாலிங்கம் திருக்கோயில்

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30 ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே [அம்பாசமுத்திரம்] அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.
காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது.
இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் என்னும் ஊரில் அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் திருவிடைமருதூர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருவிடைமருதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார்.
இத்தலத்தை 'பஞ்ச லிங்கத்தலம்" என்றும் சொல்வர். கோயிலின் உட்பிரகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குபக்கம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93வது தேவாரத்தலம் ஆகும். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.
இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இத்தலத்தில் அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. தைப்பூசம் 10 நாள் திருவிழாவின்போது தினந்தோறும் காலையும், மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கும். திருவாதிரை, ஆடிப்பூரம் ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும். தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் இக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
இக்கோயிலில் அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம் வந்து மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள் முதலியவற்றிலிருந்து குணமடைகின்றனர். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றிற்கும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும், வேட்டி படைத்தும், அம்பாளுக்கு சேலை வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu