நினைத்ததை அருளும் பழனி முருகன்... வேண்டினால் உடனே நிறைவேறும்......

Palani Temple History in Tamil
X

Palani Temple History in Tamil

Palani Temple History in Tamil-தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தாலும் பழனி மலைக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் வேண்டியவர்களுக்கு அருளும் முருகன் வீற்றிருக்கும்இடம்தான் பழனி.

Palani Temple History in Tamil

பழனி மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள தண்டாயுதபாணியை தரிசிக்க வந்த பக்தர்கள்கூட்டம் (பைல்படம்)

தமிழகத்தில் உள்ள கோயில்களில்மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது பழனியாகும். முருகனுடைய சிறப்புத்தலமாக இது கருதப்படுவதால் ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து செல்லும் இடமாக உள்ளது.மலைக்குன்றின் மேல் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் ஒரு சிலர் யானைப்பாதை என்று சொல்லப்படும் அந்த வழியாக நடையாகவே பலர் மலை மீது ஏறி தரிசனம் செய்கின்றனர். இந்த நடை பாதையின்இடையிடையே அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல மண்டபம் அமைத்துள்ளதால் வயதானவர்கள் கூட இவ்வழியேதான் சென்று வருகின்றனர்.

பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 115 கி.மீ. மேற்கே பழனி உள்ளது. இக்கோயிலில் உள் ள முருகன் சிலையானது போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.பழனி மலையில் முருகன் ஏன் வந்தமர்ந்தார் என்பதற்கு ஒரு புராணக்கதையே உள்ளது. அதாவது ஒரு நாள் நாரதர் மிகவும் அரிதாக கிடைக்க கூடிய ஞானப்பழத்தினை சிவபெருமானுக்கு நைவேத்யம் செய்ய கொண்டு வந்தார். சிவபெருமானின் உமையாளாகிய பார்வதி தேவி அந்த ஞானப்பழத்தினை தனது பிள்ளைகளான குமரனுக்கும், விநாயகனுக்கும் பிரித்துகொடுக்க விரும்பினாள். அப்போது சிவபெருமாளோ பழத்தினை பிரித்தால் அதன் தனித்துவத்தை இழந்துவிடும் என சொல்லி இருவருக்கும் இப்பழம் கிடைக்க வேண்டுமெனில் ஒரு போட்டி வைப்பதாக அறிவித்தார்.

தைப்பூச விழாவின் போது தண்டாயுதபாணிசுவாமிகள் திருமணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் (பைல்படம்)

இந்த உலகத்தினை யார் முதலில் சுற்றி வருகின்றனரோ அவருக்கே இந்த ஞானப்பழத்தினை பரிசாக தருவதாக அறிவித்தார். இந்தபோட்டியில் கலந்துகொண்ட விநாயகரோ தனது பெற்றோரே எனக்கு உலகம் எனக் கருதி அவர்களைச் சுற்றிவந்து முதலாவதாக ஞானப்பழத்தினைப்பெற்றுக்கொண்டார்.

நிஜமாகவே உலகத்தினைச் சுற்றச் சென்ற முருகன் இதனைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததோடு பெரும் ஏமாற்றம் அடைந்து போனார்.இதனால் அனைத்தையும் துறந்த முருகன் பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் '' பழம் நீ'' (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனி மலை அங்கு வருவதற்கு பெரிதும் முருகனுக்கு உதவியவர் இடும்பன் ஆவார். அவர்தான் பெரியதராசின் மூலமாக பழனிமலையையும், இடும்பமலையையும் துாக்கிக்கொண்டு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

பழனம் என்ற பழந்தமிழ்ச்சொல்லின் அடிப்படையில்தான் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தினைக் குறிப்பதால் விளைச்சல் நிறைந்த நிலத்தால் உருவானதுதான் பழனி ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

பழனிமலையில் அக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் யானைப்பாதைகளும், படிக்கட்டும். ஆனால் தற்காலத்தில் பக்தர்கள் படியேறி வருவது என்பது கடினமாக உள்ளதாக அறியப்பட்டதை யடுத்து விஞ்ச் என்று சொல்லக்கூடிய மின்இழுவை வாகனத்தினை அடிவாரத்திலிருந்து மலைக்குன்றுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்ல அமைக்கப்பட்டு இதற்கு உரிய கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தேவஸ்தானம் சார்பில் கல்லுாரி நடந்து வருகிறது. மாலை நேரத்தில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவும் நாம் இன்டர்நெட் வாயிலாகவே செய்துகொள்ளலாம்.

வள்ளி, தெய்வானை சமேதரராக தண்டாயுதபாணி சுவாமிகள் தங்கத்தேர் உலா (பைல்படம்)

இக்கோயிலுக்கு பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இருந்தாலும் விவிசிஆர். முருகேச முதலியார் என்பவர்தான் முக்கிய நன்கொடைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தான கல்லுாரிக்கு இலவச இடம், தங்கத்தேர், வைரவேல், தங்கமயில் வாகனம், விஞ்ச் மின்இழுவை வாகனம் ஆகியவற்றை இவரே நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகா...முருகா.. சிலையின் சிறப்புகள்

குன்றின் மேல் அமர்ந்துள்ள குமரனின் சிலையானது நவபாஷாணத்தால் அமைக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் போகர் எனும் சித்தர் ஆவார். நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது ஆகும். இந்த நவபாஷாண சிலையானது மீன்களைப் போன்று செதில்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சிலையானது தற்போது பழுது ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த நவபாஷாண சிலை மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் சிறு வில்லையாக பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

சித்தர் போகர்

தமிழ்நாட்டிலிருந்த சித்தர்களில் போகர் என்பவர் பிரபலமானவர். இவர்தான் நவபாஷாணத்தைக்கொண்டு முருகன் சிலையினை வடிவமைத்தார். இச்சிலை வடிவமைத்ததற்கு சுவையான தகவல்கள் அடங்கியுள்ளது என்பது பலருக்கும் இன்று வரை தெரியாது.

அதாவது அகத்திய முனிவர் தன்னை நாடி வரும் அனைவருக்கும் பஸ்பம், வில்லை போன்ற மருந்துகளை அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களைக் குணப்படுத்தி வந்தார். ஆனால் போகர் சித்தர் என்ன செய்தார் தெரியுமா? நவபாஷாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட வில்லைகளை அவரை நாடி வரும் பக்தர்களுக்கு அளித்தார்.

அகத்தியர் அளித்த மருந்தானது மக்களின் நோய்களைக் குணப்படுத்தியதால் குணமடைந்து வந்தனர். போகர் அளித்த வீரியம் மிகுந்த நவபாஷாணவில்லைகளை உண்டவர்கள் உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போகர் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். அவர் என்ன செய்தார் தெரியுமா? நவபாஷாணத்தின் வீரியத்தைக்குறைப்பதற்காக ஒரு சிலையினை வடிவமைத்தார். அதன் மீது சந்தனத்தைப் பூசி ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லை எடுத்து தன்னை நாடி வந்த பொதுமக்களுக்கு வழங்க துவங்கினார் என்பது செவிவழியான செய்தியாக இன்றளவில் கருதப்படுகிறது.

பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தங்ககோபுர விமானம் (பைல்படம்)

காவடியின் சிறப்புகள்

உங்களுக்கு தெரியுமா? ..உள்ளூரின் பெருமை உள்ளூரில் இருப்பவர்களுக்கு தெரியாது என சொல்வார்கள். அந்த வகையில் நம் மாநிலத்திலுள்ள பழனியின் அருமை நமக்கு தெரிவதில்லை. இதனால் அருகில் உள்ள மாநிலமான கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள்தான் அதிகம் தொடர்ந்து வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நாம் எப்படி திருப்பதிக்கு ஆந்திராவை நோக்கி சென்று அங்குள்ள கோயிலை வளப்படுத்தி வருகிறோமா? அதுபோல் சபரிமலைக்கு நம் மாநிலத்தில்தான் அதிகம் பேர் ஆண்டுதோறும் செல்கின்றனர். அந்த வகையில் பழனிக்கு பெருமை சேர்த்து வருவது கேரள மக்களே...

கேரளாவின் எழபெத்தவீடு என்ற இடத்தினை் சேர்ந்த பக்தர் 450 ஆண்டுகளுக்கு முன்பாக பழனிக்கு காவடியை முதன் முதலாக சுமந்து வந்தார். அதாவது அந்த காவடியானது மரத்தினால் அலுமினியக்கலவையோடு செய்யப்பட்டது. இதன் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மறுபுறத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளது. மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ள போகர் சமாதியில் இப்போது வரை இந்த காவடியானது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு செல்ல இழுவை ரயில் பெட்டி வசதியும் உண்டு (வின்ச்)(பைல்படம்)

திருவிழாக்களின் சிறப்பு

குன்றின் மேல் அமர்ந்துள்ள குமரனின் திருத்தலமான பழனியில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் தைப்பூசம் கோலாகலமாககொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் வரும் பங்குனி உத்திரத்திருவிழா, கந்த சஷ்டி விழா அன்று நடக்கும் சூரசம்ஹாரம், ஆகியவை முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அறுபடை வீடு

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.

பழனி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான்...தேவஸ்தான பஞ்சாமிர்த பிரசாதம் (பைல்படம்)

பழனி மலைக்குன்றின் மீது வீற்றிருக்கும் மூலவர் தண்டாயுதபாணிக்கு 4 விதமான பொருட்களால்தான் அபிஷேகம் நடக்கிறது. அதாவது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்கள்தான்.

குளிர்மாதமான மார்கழியில் மட்டும் பன்னீர் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. சந்தனம், பன்னீர் தவிர மற்ற எல்லா

பொருட்களுமே விக்கிரகத்தின் சிரசில் வைத்து உடனே எடுக்கப்படுகிறது. முழுமையான அபிஷேகம் என்பது பன்னீரும் சந்தனம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற பிரசாதம் என்பதால் அது கிடைப்பதே பக்தர்களுக்கு பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.


அடிவாரத்திலிருந்து பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப்கார் வசதியும் உண்டு (பைல்படம்)

நாளொன்றுக்கு 6 முறை தண்டாயுதபாணி விக்கிரகத்துக்கு அபிஷேகம் நடக்கிறது. அலங்காரமும் அபிஷேகம் முடிந்த பின் செய்யப்படுகிறது. ஒரு அபிஷேகம் முடிந்த பின்னர் அலங்காரம் செய்யப்படும் பட்சத்தில்அடுத்த அபிஷேகம் நடக்கும் வரை எந்தவிதமான மலர்களோ,மாலைகளோ சாற்றப்படுவதில்லை.

தண்டாயுதபாணி விக்கிரக மார்பில் மட்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படுகிறது இரவு நேரத்தில். முகத்தில் இருபுருவங்களுக்கு இடையே பொட்டு வடிவத்தில் சிறிய சந்தனக்காப்பு வைக்கப்படுகிறது. முன்பெல்லாம் முகம் முழுக்க சந்தனம் பூசப்பட்டநிலையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். என்பதால் அதிலிருந்து நீர் வெளிப்படுவதை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இரவு நேரத்தில் மின்னொலியில் ஜொலிக்கும் பழனி மலைக்குன்று தண்டாயுதபாணிசுவாமி கோயில் (பைல்படம்)

4 ஆயிரம் மூலிகைகள்

அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் கல்லில் மூலவர் சிலை இருந்தபோதும் பல கோயில்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளன. ஆனால் நவபாஷாணத்தில் சிலை செய்த சித்தர்களால் இக்கோயில் மென்மேலும் வளர்ந்து வருவதை சித்தர்களின் மகிமை என்று கூட சொல்லலாம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடில் அதிவேக கார் விபத்து – மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு!