பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் பற்றிய விபரங்கள்

பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் பற்றிய விபரங்கள்
X

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழனி கோவில் பற்றிய தகவல்கள் உங்களுக்காக்

பழனி மலை மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதியாகிய விளங்குகிறது இப்பழனிமலைக்கு அருகில் மற்றுமோர் சிறுகுன்று இடும்பன்மலை எனப் பெயர் பெற்று நிற்கிறது. இப்பழனி மலையின் உச்சியில் முருகன் திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது.

கருவறையில் அமைக்கப்பட்டுள்ள முருகன் ஆண்டியின் கோலத்தில் கையில் கோல் (தண்டு) ஒன்றை வைத்துள்ள நிலையில் உள்ளார். இச்சிற்பம் மற்ற சிற்பங்களைப் போல கல்லால் செய்யப்பட்டதன்று. ஒன்பது வகையான மருத்துவப் பொருட்களைக் கொண்டு (நவபாஷாணம்) முருகப்பெருமானின் திருமேனி போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. இத்தலத்தின் மேற்கே 2கி.மீ தொலைவில் உள்ள சண்முகநதி புனிததீர்த்தமாக இது விளங்குகிறது. பாலாறு, வரத்தாறு, பொருந்தலாறு, சுருளியாறு, கல்லாறு, பச்சையாறு எனப்படும் ஆறு நதிகள் இணைந்து சண்முகநதி என்ற பெயருடன் விளங்குகிறது.

மலைக்கோயிலுக்கு செல்லும் வழிகள் :

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் நான்கு வகையான வழிகளில் மலைக்கோயிலைச் சென்றடையலாம்.


1.படிப்பாதை:

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குப் படிப்பாதை வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். படிப்பாதையில் மொத்தம் 693 படிகள் உள்ளன. பக்தர்கள் வசதிக்காகப் போதுமான இடைவெளியில் நிழல்மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.

2.யானைப்பாதை:

பக்தர்கள் மலைக்கோயிலுக்கு யானைப்பாதை வழியாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இப்பாதை சாய்தளமாகவும், குறைவானப்படிகள் உள்ளதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் வயோதிகபக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நிழல்மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.


3.மின்இழுவை இரயில்:

பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக 3 மின் இழுவை இரயில்கள் முறையே 1965, 1982, 1988 ஆகிய ஆண்டுகளில் துவங்கப்பட்டு 8 நிமிடங்களில் மணிக்கு 200 நபர்கள் வீதம் மலைக்கோயிலைச் சென்றடையலாம்.

4.கம்பிவடஊர்தி:

பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கம்பிவட ஊர்திசேவை 03.11.2004 அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக 1 மணி நேரத்திற்கு 150 நபர்கள் வீதம் 3 நிமிடங்களில் மலைக்கோயிலைச் சென்றடையலாம்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பூஜை விபரங்கள்:

விஸ்வரூப தரிசனம் (காலை 6.00 மணி)

அதிகாலையில் நிகழும் பூஜை விஸ்வரூப தரிசனம்.

துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் செய்யப்படுகின்றது. பழனி முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் காண்பது மிகுந்த நன்மையளிக்கக்கூடியது என்றும், வேண்டிக் கொண்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு இராக்காலசந்தனம், கோவணதீர்த்தம், இரவில் சாத்தப்பட்ட மலர்கள் முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.


1.விளா பூஜை (சாது சந்நியாசி அலங்காரம்) : (அதிகாலை 6.40 - 7.15 மணிக்கு)

ஆத்மார்த்த மூர்த்திகளை ஆண்டவர் முன்பு வைத்துப் புண்ணியமாக வாசனம் செய்து நான்குதிக்கிலும் புனிதநீர்தெளித்துப் பின் அர்த்தமண்டபத்திலுள்ள சொக்க விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆண்டவருக்கும் ஆத்மார்த்த மூர்த்திக்கும் பூஜைசெய்யப்படும்.

கருவறையில் ஆண்டவருக்கு இடதுபக்கத்தில் மரகதலிங்கமும், அம்பிகையும், சாலக்கிராமமும் ஒரு பேழையில் வைக்கப்பட்டுள்ளன. விளாபூஜையின் போது பழனி ஆண்டவர் முதலில் தாமேதம் ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிவனை வழிபடுவதா ஐதீகம். மூலவருக்கு சுத்தன்னம், நெய்யுடன் கூடிய புளியில்லா பொரித்தக்கூட்டு, சுக்கு, சர்க்கரை படையலாகப் படைக்கப்பட்டு, சொக்கவிநாயகருக்கும் ஆன்மார்த்த மூர்த்திக்கும் சர்க்கரைப் பொங்கல் படையலாகப் படைக்கப்படும். தண்டாயுதபாணி சுவாமிக்குக் காவியுடையோடு கூடிய வைதீகசாது சந்நியாசி ஒப்பனை செய்யப்படுகிறது.


2.சிறுகாலச்சந்தி பூஜை (வேடர் அலங்காரம்) ( காலை 8.00 - 8.30 மணி)

பழனி ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனைக்குப் பின் படையல், ஏக தீபாராதனைக்காட்டி பக்தர்களுக்கு திருவமுது வழங்கப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு மிளகு, சாம்பார் சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. சிறுகாலச்சந்தி பூஜையின் போது வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறுகாலப்பூஜை நடைபெறுகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அந்த அதிகாரி வேண்டிக் கொண்டார். வலிதீர்ந்தால், தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அந்த அதிகாரியின் தீராதவயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின் போது வெண்ணெய்யும் நெய்யால் சுடப்பட்ட ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.

சிறுகாலப் பூஜையின் போது பழனியாண்டவருக்கு வேடர் வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது.

3.காலச்சந்தி பூஜை (பாலசுப்பிரமணியர் அலங்காரம்) ( காலை 9.00 - 9.30 மணி)

கால பூஜையின் போது பழனி ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனைக்குப்பின் வழிபாடு நடைபெறுகிறது. படையலாக வெண்பொங்கல் படைக்கப்படுகிறது. பழனியாண்டவருக்குப் பாலசுப்பிரமணியர் அலங்காரம் செய்யப்படுகிறது.

4.உச்சிக்கால பூஜை (வைதீகாள் அலங்காரம்) ( நண்பகல் 12.00 - 12.45 மணி)

ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனைக்குப் பின் தளிகை படையலாகச் செய்து சோடச தீபாராதனையும், உபசாரங்களும் செய்யப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.

தயிர்சாதம், புளிசாதம், பால்பாயாசம், சுத்தான்னம் படையலாகப் படைக்கப்படும். உச்சிக்காலத்தில் பழனி ஆண்டவர் முன்பு யக்நோபவீதம் வேதபாராயணம் செய்வித்துப் பூணூல் அணிவித்து வைதீக அலங்காரத்தில் மணிமகுடம் பூட்டப்படும். வைதீகாள் அலங்காரத்தில் காட்சியளிக்கும் பழனியாண்டவருக்குக் கட்டியம் கூறுதல், வேதம் ஓதுதல், நாதசுர மங்கள இசை வழங்குதல் போன்றவை நடைபெறும்.

காட்டப்படும் சோடச உபச்சாரங்கள் அலங்கார தீபம், பஞ்சமுகதீபம், சர்ப்பதீபம், மயூரதீபம், குக்குடதீபம், கஜதீபம், புருஷாமிருகதீபம், பூரணகும்பதீபம், கற்பூரதீபம்போன்றதீபங்களும், மந்த்ரபுஷ்பாஞ்சலி, குடை, வெண்சாமரம், விசிறி, கண்ணாடி, கொடி ஆலவட்டம் போன்ற உபச்சாரங்கள் செய்வித்து மஹாதூபாராதனை நடைபெறுகிறது. பழனியாண்டவருக்கு வைதீகாள் அலங்காரம் செய்யப்படுகிறது.


5.சாயரட்சை பூஜை (இராஜ அலங்காரம்) ( மாலை 5.30 - 6.15 மணி)

பழனி ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைக்குப் பின் சோடச தீபாராதனையும் உபசாரங்களும் நடைபெற்ற பின் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். புளிசாதம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் படையலாகப் படைக்கப்படுகிறது. பழனியாண்டவருக்கு இராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.

6.இராக்கால பூஜை (புஷ்ப அலங்காரம்) ( இரவு 8.30 - 9.00 மணி மாறுதலுக்கு உட்பட்டது)

பழனி ஆண்டவரின் திருமேனியில் இராக்கால பூஜையின் போது சந்தனம் சாத்துவர். திருமேனியில் சாத்துப்படி செய்த சந்தனம் மறுநாள் காலையில் விசுவரூப வழி பாட்டின் போது பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. இச்சந்தனம் இராக்காலச்சந்தனம் என்று தொன்று தொட்டு குறிப்பிடப்படுகிறது. தீராத நோய் தீர்த்தருளும் சந்தனமாக விளங்குகிறது.

பள்ளியறை பூஜை :

இராக்காலப் பூஜை முடிந்ததும் தீபாராதனைக்குப் பின் சுவாமியைப் பள்ளியறைக்கு எழுந்தருளச்செய்வர். பள்ளியறை ஊஞ்சலில் அமருகின்ற பாடல் திருக்கோயில் ஓதுவாரால் பாடப்படுகிறது.

திருக்காப்பிடுதல் :

திருக்கோயில் ஓதுவார்கள் பள்ளியறை தாலாட்டுப்பாடி முடிந்ததும் கட்டியக்காரர் பழனியாண்டவர் மீது கட்டியம் கூறுதலும் பிறகு நாதசுர இசையில் ஆனந்தபைரவி ராகத்தில் ஊஞ்சல் பாடலும், நீலாம்பரி ராகத்தில் லாலி பாடலும் இசைக்கப்படுகிறது. அதன் பிறகு தீபாராதனை நடைபெறும். பைரவர் பூஜை முடிந்த பின்னர் சன்னதி திருக்காப்பிடப்படும்.

பூஜைகள் மற்றும் கட்டணங்கள்

1 விளா பூஜை 150.00

2 கால சந்தி பூஜை கட்டளை 900.00

3 சிறுகாலச்சந்தி பூஜை 150.00

4 சிறுகாலச்சந்தி பூஜை கட்டளை 900.00

5 விளா பூஜை கட்டளை 900.00

6 இராக்கால பூஜை 150.00

7 இராக்கால பூஜை கட்டளை 900.00

8 சாயரட்சை பூஜை கட்டளை 900.00

9 காலச்சந்தி பூஜை 150.00

10 சாயரட்சை பூஜை 150.00

11 உச்சிக்கால பூஜை 150.00

12 உச்சிக்கால பூஜை கட்டளை 900.00

பழனி கோயில் அதிகாரிகள் கோயில் சேவைகளை நடத்த உதவும் ஆன்லைன் முறையை உருவாக்கியுள்ளனர். பூஜை அல்லது தரிசனத்திற்காக கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

  • பழனி கோயில் இணையதள போர்டல் இணைப்பைப் பார்வையிடவும் .
  • https://palanimurugan.hrce.tn.gov.in
  • முகப்புப்பக்க ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று, டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை உள்ளிடவும்.
  • அடுத்து, தொடர ஒரு தேதி மற்றும் நேர ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதே கணக்கைப் பயன்படுத்தி, பக்தர்களின் விவரங்கள் மற்றும் பிற முன்பதிவுகள் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • கட்டணப் பக்கத்திற்குச் சென்று தேவையான தொகையை உள்ளிடவும்.
  • தகவலை மதிப்பாய்வு செய்து கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!