தமிழக கோவில்களில் திருப்பதி கோவில் போல் கட்டுப்பாடுகளை அமல் படுத்த உத்தரவு

தமிழக கோவில்களில் திருப்பதி கோவில் போல் கட்டுப்பாடுகளை அமல் படுத்த உத்தரவு
X

திருச்செந்தூர் முருகன் கோவில். கோப்பு படம்.

தமிழக கோவில்களில் திருப்பதி கோவில் போல் கட்டுப்பாடுகளை அமல் படுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் இந்து கோவில்கள் உள்ளன. இந்த இந்து கோவில்கள் எல்லாம் நமது கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றன. குறைந்தது 800 முதல் 5000 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளன. பல்வேறு வம்சங்களில் வந்த மன்னர்கள்,ஆட்சியாளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், ராமேசுவரம், சிதம்பரம், திருத்தனி, கோவை என்று பல ஊர்களில் சிறப்பு வாய்ந்த இந்து கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் எல்லாம் ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி வழிபாட்டு முறைகள், கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்த முறையை மாற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருப்பதி கோவிலில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சித்ரங்கநாதன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், "திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ம் தேதி தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சூரசம்ஹாரம் 30-ம் தேதி நடக்கிறது. அப்போது எல்லாம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் கோவிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்கி தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு இந்த மனுவை இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது தெரிவித்ததாவது, "திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ராமேஸ்வரம் கோவில் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் திருப்பதி கோயிலில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. கோவிலுக்கு வெளியில் தான் யாகங்கள் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்" என நீதிபதிகள் கூறினர். அதோடு இந்த மனு குறித்து திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil