திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ரூ.23 கோடியில் புதிய சாலை
சமயபுரம் மாரியம்மன்கோவில் (கோப்பு படம்)
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள கண்ணனூரில அமைந்து உள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் செல்லும் பிரிவு ரோட்டில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையிலும் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.மேலும் சமயபுரம் தேர்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் போது போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை போக்கும் வகையில்தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக சமயபுரம் மாரியம்மன் கோயில் செல்லும் வகையில் புதிய அணுகுமுறை சாலை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை இணைக்கும் வகையில் புதிய அணுகுமுறைச் சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்காக ரூ.23.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய சாலையானது பெருவளவாய்க்கால் கரையை ஒட்டி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாய்க்காலின் இரு மருங்கிலும் 15 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலையாக இச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் கால்வாயின் பக்கவாட்டில் பாதுகாப்பிற்காக 300 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவரும் கட்டப்பட உள்ளது. வாய்க்காலின் இருமருங்கிலும் அமைக்கப்படும் இந்த புதிய சாலையில் ஒருபுறம் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும், மறுபுறம் கோயிலில் இருந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.இந்த 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய சாலையானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் கிளை சாலையாக இருக்கும்.
புதிய சாலையில் கார் மற்றும் பக்தர்களின் பேருந்துகள் அனுமதிக்கப்படும். இதனால் நேரடியாக பக்தர்களின் வாகனங்கள் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று விடலாம். இதனால் பக்தர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு உடனடியாக சமயபுரம் கோயிலுக்கு செல்லலாம்.இந்த புதிய சாலைக்கான பணிகள் 3 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.மேலும் சமயபுரத்தில் 2 திருமண மண்டபம், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.37.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு மண்டபமும், 300 பேர் அமரக்கூடிய வகையில் மற்றொரு மண்டபமும் கட்டப்பட உள்ளது.
இதேபோல சமயபுரம் கோயில் பஸ் நிலையம் 600 வாகனங்கள் நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படுத்தவும், கோயில் பூசாரிகள், பணியாளர்களுக்கான 30 குடியிருப்புகள் கட்டவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu