தமிழகத்தில் நவக்கிரக தலங்கள் எங்கே இருக்கு? எப்படி போகலாம்? வாங்க பாக்கலாம்
Navagraha Temples in Tamil Nadu
Navagraha Temples in Tamil Nadu-ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைப்பாடு, அவற்றின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. நவ என்றால் ஒன்பது, கிரகம் என்றால் கோள். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60 கி.மீ. சுற்றளவில் உள்ளது.
1. சூரியன் – சூரியனார் கோவில்
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
நவகிரகங்களில் முதன்மையாக விளங்குபவர் சூரிய பகவான். சூரியனுக்கென்று இந்தியாவில் இரண்டே இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயிலும், தெற்கே இந்த சூரியனார் கோயிலும் அமைந்துள்ளது. கோனார்க் கோயிலில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. இங்கு திருமண கோலத்தில் இரண்டு மனைவியரோடு சூரிய பகவான் காட்சியளிப்பது சிறப்பு. இங்கே சூரிய பகவான் உக்கிரமாக இல்லாமல் சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார்.
சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரிய பகவான் பார்வையை வழங்கக்கூடிய தெய்வமாகத் திகழ்கிறார். அதனால் பார்வை குன்றியவர்களும், கண் தொடர்பான நோய்கள் உடையவர்களும் இங்கு வந்து வழிபட்டு பலன் பெறுகின்றனர்.
சுக்கிர திசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு வந்து அந்தந்த நவகிரக தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர்.
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனாரை தரிசித்தால் ஆரோக்கியம், வெற்றி, வாழ்வில் செழுமை ஆகியவற்றைப் பெறலாம்.
2. சந்திரன் – திங்களூர் கோவில்
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது
இத்திருத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
தட்சனின் சாபம் நீங்க திங்களூர் திருத்தலத்தில் நீண்ட காலம் சிவபெருமானை வேண்டி தவம் செய்தான் சந்திரன். தனது பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை பூஜித்து வந்தான். ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இறைவன் சந்திரனுக்கு காட்சி கொடுத்து சாபத்தை நீக்கினார். இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கியது.
குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை அன்னப்பிரசானம் என்பர். கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது குலதெய்வக் கோயில்கள் இந்த சடங்கைச் செய்வார்கள். வசதியுள்ளோர் குருவாயூரப்பன் கோயிலில் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாக திங்களூர் கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.
சந்திர கடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சென்று வருவதால் நீண்ட ஆயுளும் சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறுவர். மன பயம், மன நோய்கள் கூட அகலும் சந்திர பகவான் துன்பங்களையும், துயர்களையும் துடைக்க வல்லவர்.
3. செவ்வாய் – வைதீஸ்வரன் கோவில்
மயிலாடுதுறையிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது
மூலவர் வைத்தியநாதர், அம்பாள் பெயர் தையல் நாயகி அம்மன். தல விருட்சம் வேம்பு. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
பொதுவாக கோயில்களில் நவகிரகங்கள் திசைமாறியிருக்கும். ஆனால் இங்கே நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலன்களை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக ஐதீகம். மற்ற திருக்கோயில்களில் சிவன் சன்னதி முன்பாகவே நவகிரக சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே மட்டும் தான் சிவனின் பின்பக்கம் உள்ளது.
இங்கு சென்று இறைவனை வணங்குபவருக்கு தைரியம், வெற்றி, பலம் ஆகியவற்றைப் பெறலாம். தைரியம் ஏற்படும் என்பதால் பயந்த சுபாவம் கொண்டவர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.
4. புதன் – திருவெண்காடு
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 16 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
மூலவர் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர். அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை.
கல்வியையும், ஞானத்தையும் வழங்கும் வித்யாகாரகன் புதன் பகவான். நவகிரகங்களில் சுபகிரகம் என்ற அந்தஸ்தைப் பெற்ற கிரகம்.
உடலில் நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்க புதன் பகவானை வழிபடுகின்றனர். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
புதனின் அருள்பார்வையில் அறிவும், புத்தி சாதுர்யமும் கிட்டும். கல்வியில் மேன்மை ஏற்பட, கணிதத்தில் வல்லமை பெற. வியாபாரம் பெருக இந்தத் தலத்து இறைவனை வழிபடலாம்.
5. குரு – ஆலங்குடி
கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில்
இறைவன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், இறைவி ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை
கிரகங்களில் வியாழன் ராஜ கிரகம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இத்தலத்தில் நாகதோஷங்கள் நீங்கவும், பயம், குழப்பம் தீர இங்குள்ள விநாயகரையும், திருமணத் தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்த விளங்கவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 12 ராசிகளுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையும் பொழுது இத்தலத்தில் சிறப்புப் பூசைகள் நடைபெறும். இத்திருக்கோயிலில் குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலர் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலை, சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன் நாம அர்ச்சனை, பாலாபிஷேகம் மற்றும் குரு ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கி குரு பகவான் அருள்புரிவார் என்பது ஐதீகம். தனுசு, மீனம் ராசிக் காரர்கள் ஒரு முறையாவது சென்று வருவது நலம்.
6. சுக்கிரன் – கஞ்சனூர்
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது
மூலவர் அக்னீஸ்வரர், இறைவி கற்பகாம்பாள்
சிவன் பார்வதி திருமணக் காட்சியை பிரம்மா இத்தலத்திலிருந்து கண்டார். கணவன் மார்கள் தங்கள் மனைவியரின் நல்வாழ்விற்காக இங்கு வந்து தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள், இல்லற வாழ்வில் சிக்கல் இருப்பவர்கள் கூட இங்கு வந்து இறைவனை வழிபடலாம்.
7. சனி – திருநள்ளாறு
காரைக்காலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது
மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
இத்தலத்தில் உள்ள சனி பகவானை வணங்கும் முறையானது, காலை 5 மணிக்கு நளதீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். பின்பு கோயிலின் உள்ளே அமைந்துள்ள கங்கா தீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து, ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் சுவரில் வரையப்பட்டுள்ள நள சரித்திரத்தை பக்தியுடன் பார்த்த பிறகு காளத்திநாதரை வணங்க வேண்டும். அதன் பின் மூலவர் சன்னதிக்குள் சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். பின் அங்குள்ள தெய்வங்களை வணங்கி கட்டைக் கோபுர வாசல் சென்று அன்னை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். அதற்கு பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.
திருநாள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று கூறுவார்கள். கோயிலைச் சுற்றிலும் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதிலே நளதீர்த்தத்தில் நீராடினால் சனியின் தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் முன்வினை சாபங்கள் யாவும் விலகும். வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடனாக இருந்தால் கூட கவிதை பாடுவான் என்பது நம்பிக்கை.
12 ராசிகளுக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி செய்யும் போது சிறப்புப் பூசைகள் நடைபெறும். இங்குள்ள நளதீர்த்தத்தில் குளிப்பதால் தீமைகள் விலகிவிடும் என்று நம்பப்படுகிறது. சனி ஜாதகத்தில் கோச்சாரப்படி நல்ல நிலையில் இல்லை என்றால் இந்தத் திருத்தலத்துக்கு வந்து வழிபடலாம்.
8. கேது – கீழ்பெரும்பள்ளம்
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் சீர்காழியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது
மூலவர் நாகநாத சுவாமிகள். அம்பாள் சௌந்தர்யநாயகி.
ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின்னர் கேதுவையும் வழிபட வேண்டும். கேது பகவானுக்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாதம் நைவேத்தியம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது இத்தலத்தில் விசேஷம். கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவகிரக சன்னதி இல்லை.
இத்தலத்தில் நரம்பு, வாயு தொடர்பான நோய்கள் நீங்கவும், பயம் நீங்கவும், தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்கவும், குடும்பத்தில் எப்போதும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், தலைமுறை சிறக்கவும் இறைவன் நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடுகின்றனர். ஜாகத்தில் கேது திசை நடப்பவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இத்தலம் வந்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடனாக பக்தர்கள் கேது பகவானுக்கு கொள்ளு சாதம் படைத்து, பல வர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள். கேது லக்னம்,2, 7,8 ஆகிய இடங்களில் அமையப்பெற்றால் அவசியம் இந்தத் திருத்தலத்தலம் வந்து வழிபடுவது நல்லது.
9. ராகு – திருநாகேஸ்வரம்
கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில்
மூலவர் நாகேஸ்வரர், நாகநாதர். அம்பாள் பிறையணி வானுதலாள்
நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில்
ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதுண்டு.
ஆதிசேஷன், தட்சன், கார்கோடகன் எனும் சர்ப்பங்கள் (பாம்புகள்) சிவபெருமானை வழிபட்ட தலம். இங்கு உள்ள ஈசனை வழிபட நாக தோஷம் தீரும். தோல் வியாதிகள் அகலும்.
நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாகிறது என்பது ஐதீகம். பாலாபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறுவது மிகப்பெரிய அதிசயம்.
மேலும் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனான நாகநாதரை வணங்கி வழிபடுகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu