முளைப்பாரி ஊர்வலம், வான வேடிக்கைகளால் களை கட்டிய அம்மன் கோவில் கொடை விழா
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி தைக்காவூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென் தமிழகத்தின் கடலோர நகரமான குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியனால் வணங்கப்பட்ட இந்தக் கோவிலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது மட்டுமல்ல இறைவன் சிவபெருமானும், இறைவி பார்வதி தேவியும் ஒரே சன்னதியில் அமர்ந்து ஆசீர்வாதம் வழங்கும் திருத்தலமும் ஆகும்.
இத்தகைய சிறப்புக்குரிய குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா ஆடி மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட முத்தாரம்மன் கோவில்களில் கொடை விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி அருகில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த தைக்காவூர் அருள்மிகு முத்தாரம்மன் ஆலய வருடாந்திர கொடை விழா கடந்த திங்கட்கிழமை கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வில்லுப்பாட்டு, அம்மன் கும்ப வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. கோவில் அருகில் முளைப்பிறையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வைத்து வளர்த்த முளைப்பாரி எடுத்து நாட்டுப்புற கும்மிபாட்டு பாடினார்கள். பின்னர் தைக்காவூரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலம் ஆக வந்தனர். நிறைவாக கோவிலில் முளைப்பாரி சேர்க்கப்பட்டது. விழா தொடர்ந்து இன்று இரவு வரை நடைபெற உள்ளது.நாளை உணவு எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நேற்றைய முளைப்பாரி ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க தைக்காவூர் இளைஞர்கள் வான வேடிக்கை நடத்தியது அனைவரையும் கவர்ந்திழுப்பதாக இருந்தது. தினமும் மூன்று வேளையும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஊர்பொது மக்கள் வெளியூர்களில் வசிப்பவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் .இதே போல தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் அம்மன் கோவில் கொடை விழாக்கள் களை கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu