மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்

மெகர் பாபா மௌன விரதத்தை தொடங்கிய நாள்
X

மெகர் பாபா 

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

மெகர் பாபா என்பவர் ஆன்மீகவாதி இவர், தான் கடவுளின் அவதாரம் எனக் கூறினார்.

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவேயில்லை. எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். செய்கைகள் வழியாகவும் உத்தரவிடுவதுண்டாம்.

இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவு கூரப்படுகிறது.

மெகர் பாபாவின் இயற்பெயர் மெர்வான் ஷெரியார் இரானி. 1894-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி பிறந்தவர். இவர் ஜோராஷ்ட்ரிய சமயத்தைச் சேர்ந்தவர். தன் பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த மெர்வான் பெற்றோர், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் அன்பான குழந்தையெனப் பெயர்பெற்றிருந்தார். கிறிஸ்டியன் உயர்நிலைப் பள்ளி மற்றும் டெக்கான் கல்லூரியில் அவர் கல்வி பயின்றார்.

புனேயைச் சேர்ந்த அக்காலத்திய ஆன்மிக குருக்கள் ஐந்து பேரிடம் சீடராக இருந்த மெகர் பாபா 1922-ம் ஆண்டில் தனது ஆன்மிகப் பணிகளைத் தொடங்கினார். பெண் குருவான ஹஸ்ரத் பாபஜன், அவர் நெற்றியில் முத்தமிட்டதன் மூலம் அவருக்கு ஆன்மிகத் தீட்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

மெகர் பாபா, இந்த அனுபவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையிலேயே பல மாதங்களைக் கழித்தார். தனது ஐந்து குருக்களின் தலைமைக் குருவாக இருந்த ஷீரடி சாய்பாபாவைத் தேடி புனேவிலிருந்து பயணமானார். மெகர் பாபாவின் வல்லமையை உணர்ந்த ஷீரடி சாய்பாபா அவரை உபாஸ்னி மகராஜிடம் அனுப்பி வைத்தார். உபாஸ்னி மகாராஜின் இருப்பிடத்தைத் தேடி மெர்வான் சென்றடைந்தார்.

அவரைத் தூரத்திலேயே பார்த்த உபாஸ்னி மகராஜ் தன்னைத் தேடிவந்த இளைஞன் மீது ஒரு கல்லை விட்டெறிந்தார். அந்தக் கல் மெர்வானின் நெற்றியில் தாக்கியது. மெர்வானின் பெண் குருவான ஹஸ்ரத் பாபஜன் முத்தமிட்டு தீட்சை குடுத்த நெற்றிப் பொட்டில் அந்தக் கல் தாக்கியிருந்தது. அதற்குப் பிறகு தீவிர தியானத்திலும், இறை பரவச நிலையிலும் தனது ஐந்தாண்டுகளைக் கழித்தார்.

1920களின் இறுதியில் தனது சீடர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத் நகரில் ஆன்மீக அமைப்பை உருவாக்கினார். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுச் சேவைத் திட்டங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார். ஓய்வேயற்ற தனது பணிகளுக்கிடையே திடீரென்று மௌன நிலையை அடைந்தார் மெகர் பாபா.

1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தொடங்கி 44 ஆண்டுகள் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவேயில்லை. எழுத்து மூலமாகவே முக்கியமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். செய்கைகள் வழியாகவும் உத்தரவிடுவதுண்டு.

1940 களில் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஏழைகள், தொழுநோயாளிகள், மனநலப் பாதிப்புள்ளவர்களுக்குப் பணிபுரிவதற்காக ஆசிரமங்களை உருவாக்கினார். இந்தியாவுக்கு வெளியே தெற்கு கரோலினாவிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனுக்கு அருகேயும் இரண்டு ஆசிரமங்களை உருவாக்கினார்.

1960 களில் மேற்கு நாடுகளில் போதைப்பொருள் உபயோகம் சாதாரண மக்களிடையே அதிகரித்தது. போதை மருந்துகளை உட்கொள்வதின் மூலம் ஆன்மீக அனுபவங்களை அடைய முடியும் என்ற தவறான நம்பிக்கையும் அக்காலகட்டத்தில் இருந்தது. போதை மருந்துகள் மூலமாகக் கடவுளை அடைய முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது என்று அறிவித்தார் பாபா.

மெகர் பாபா என்ற அசாதாரண மனிதனின் கதை அன்பால் ஆன ஒரு மனிதனின் கதை. அன்பைப் புனிதச் செயல் என்று பலரும் பேசுகிறார்கள். ஆனால் மெகர் பாபாவோ அதை வாழ்ந்து காட்டினார். அன்பு, தூய்மை, பொதுச்சேவை மூலம் ஆன்மிக உயரத்தை அடைய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு அவர்.

மனித வரலாற்றில் பல முக்கியமான தருணங்களில் கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதாக மெகர் பாபா கூறியிருக்கிறார். அவர்கள் அவதாரம், மீட்பர், கர்த்தர் என்று பல விதமாக அழைக்கப்படலாம். ஆனால் அவர்களுக்குள் உள்ள பொதுத்தன்மை அன்புதான். தனது பேரன்பின் வழியாக அவர்கள் உலகின் துயரங்களை ஆற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதன் மூலமாக அவர்கள் இந்த உலகைப் புதுப்பிக்கின்றனர். ஏழைகள், நோயாளிகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், மனநோயாளிகள் எனத் தேடிப்போய்த் தனது சேவைகளைச் செய்தவர் மெகர் பாபா. தொழுநோயாளிகளின் கால்களைக் கழுவுவதற்காகக் குனியும்போது, "உங்களின் கால்களில் பணிகிறேன்.. அதன் மூலம் உங்களிடம் உள்ள கடவுளைப் பணிகிறேன்" என்று கூறியிருக்கிறார். அவர் தீண்டப்படாத மக்களாகக் கருதப்பட்டவர்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடினார்.

1949-ம் ஆண்டில் மெகர் பாபா, தனது ஆசிரம அமைப்புகளை முழுவதும் கலைத்தார். அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளையும் தானமாக அளித்தார். அஹமது நகருக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் உள்ள சிறு நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டார். இந்தப் பருவத்தை 'புதுவாழ்வு'என்று அறிவித்துக்கொண்டார்.

உணவு, இருப்பிடம் எதையும் பற்றிக் கவலைப்படாத நிகழ்கணத்தில் மட்டுமே வாழ முடிந்த நண்பர்கள் சிலரை மட்டுமே அருகில் வைத்துக்கொண்டார். பல இனங்கள், தேசங்கள், மதங்களைச் சேர்ந்த மக்கள் அவரை ஆயிரக்கணக்கில் தரிசிக்க வந்தனர்.


" கடவுள் எல்லாரிடத்திலும் இருக்கிறார் என்பதை தனது அன்பு உங்களுக்கு ஒரு நாள் உணர்த்தும்" என்பதே அவரது வாக்காக இருந்தது.

1969-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் மெகர் பாபா மண்ணுலகை விட்டு மறைந்தார். இன்றும் அஹமது நகருக்கு அருகே மெகராபாத்தில் அமைந்துள்ள மெகர் பாபாவின் சமாதிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்