மதுரை அரசாளும் மீனாட்சியம்மன் கோவில் பற்றி தெரிஞ்சுக்கணுமா?
Meenakshi Amman Temple History in Tamil
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். வீட்டில் என்ன ஆட்சி நடக்கிறது சிதம்பரமா, மீனாட்சியா என கேட்பதுண்டு. கணவர் ஆதிக்கம் இருந்தால் சிதம்பரம் மனைவி ஆதிக்கம் இருந்தால் மதுரை என்று கூறுவார்
சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதி முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
தலவிருட்சமாக கடம்பமரம் உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த தலத்தையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன.
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.
இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது.
15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி கோயில், எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி. மீனாட்சி அம்மன் கோபுரம் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதி, ஆவணி வீதி, அதனை அடுத்து மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் லட்சக்கணக்கான கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கோவிலின் சிறப்புகள்
கால் மாறி ஆடிய நடராஜர்:
சுவாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர். மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கு நடனமாடுகிறார்.
மதுரையை ஆண்டு ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது, "இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடதுகால் தூக்கி ஆடுகின்றாயே. எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி, கால் மாறி ஆடக் கூடாதா?... அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கேயே துறப்பேன்" என்றார்.
மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன் கிடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடிய அருளினார். நடராஜர் இருக்கும் இடம் பஞ்ச சபைகளுள் ஒன்றான வெள்ளி சபை ஆகும்.
முக்குறுணி விநாயகர் :
மீனாட்சி அம்மன் கோயிலில் சில சன்னதிகளை கட்ட திருமலை நாயக்கர் மன்னன் முடிவு செய்து, ஊருக்கு வெளியே மண் எடுத்தார். அதுதான் தற்போது வண்டியூர் தெப்பக்குளமாக உள்ளது. இங்குமண் எடுக்கும் போது இந்த முக்குறுணி விநாயகர் கிடைத்தது.
அதை மீனாட்சி அம்மன் கோயிலிலேயே மீனாட்சி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடையே கிளிகூண்டு மண்டபத்துக்கு வடக்கு பகுதியில் தனி சன்னதியில் முக்குறுணி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu