தீபாவளி பண்டிகை நாளில் வீட்டில் விளக்கேற்றும் முறையினை தெரிந்து கொள்ளுங்கள்..!
-தீபாவளி தீபம் ஏற்றும் முறை (கோப்பு படம்)
Lighting Methods on Diwali Festival
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு ஐப்பசி 26 ஆம் நாள் அதாவது நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலகெங்கும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை.
இந்த நிலையில், தீபாவளி நாளில் வீட்டில் விளக்கேற்றும் முறைகள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கம் விவரம் வருமாறு:
தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள தீய விஷயங்களை அகற்றி, நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம். தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அதனால் இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் நாம் நம்முடைய வீட்டுக்குள் இறை சிந்தனையை வரவேற்க விளக்கேற்றும் முறைகளும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன.
Lighting Methods on Diwali Festival
முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி பெருமாளுக்கு உகந்ததாகும். அதில் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, அடுத்தது துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் துளசி செடி வளர்க்க வாய்ப்பு இல்லை என்று உள்ளவர்கள் சமையல் அறையில் விளக்கேற்றலாம்.
செல்வம், வளத்தை வரவேற்க வீட்டின் வடகிழக்கு மூலையில் விளக்கேற்ற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கிழக்கு பக்கம் பார்த்தபடி மட்டுமே விளக்கேற்ற வேண்டும். வீட்டு தண்ணீர் தொட்டி அருகில் விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள தீய எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.
இந்திய பாரம்பரியத்தில் விளக்கேற்றும் நேரம் மிக முக்கியமானதாகும். வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மஹாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. எனவே, கடமைக்கு விளக்கு வைத்துவிட்டு அனைத்துவிட வேண்டாம். குறைந்தது பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.
பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும். தெய்வீக கடாட்சத்தை வீட்டுக்குள் ஈர்க்கும் ஆற்றல் பித்தளை விளக்குகளுக்கு உண்டு. தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குகளுக்கு உண்டு. விளக்கேற்றும் எண்ணெய், நல்லெண்ணைய்க்கு பதில் பசு நெய் வைத்து விளக்கேற்ற வேண்டும். பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.
தீபாவளி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4 மணி முதல் 6 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையை தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினை பாவம் விலகும். மாலையில் 4:30 மணி முதல் 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை, இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் மஹாலட்சுமி தேவி வாசம் செய்வாள்.
Lighting Methods on Diwali Festival
அத்துடன் வீடு முழுவதும் நேர்மறையான அதிர்வுகளை பரப்புகிறது. நம் வாழ்வில் இல்ல செல்வ செழிப்பு, ஆயுள், ஆரோக்கியம், அதிர்ஷ்டத்தை பெற்று தரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதோடு நன்கு சுபீட்சம் அடைவதற்கான வழிமுறைகள் பிறக்கும் என பிரத்தியங்கிராதேவி சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu