'காகங்களே பறக்காத' அதிசய மலை; அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரரை தரிசிக்கலாம் வாங்க..!

Ayyarmalai Ratnakrisvara
X

Ayyarmalai Ratnakrisvara

Ayyarmalai Ratnakrisvara-கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில், 1017 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம், மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆகும்.

Ayyarmalai Ratnakrisvara-ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கிறார். சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகிறது. ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.

இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் பெற்றாரா, அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் ஒன்பது என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தால், அதற்கான பதில் இல்லை. இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறும் உள்ளது.

ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். "மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்" என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன், அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு. அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு 'முடித்தழும்பர்' எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கிறது.

சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

குலதெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

இந்த சிவஸ்தலத்தின் மலையின் மேல் காகங்கள் பறப்பது இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ரத்தினகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வைக்கப்பட்டிருந்தது. கடும் தாகத்தில் அங்கு வந்த ஒரு காகம், அந்தப் புனித நீரைக் குடித்ததோடு, தட்டிவிட்டு, கீழே நீர் சிந்தக் காரணமானது. இதனால், சிவனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டதாம். `எனக்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த புனித நீரை தட்டிவிட்ட உன்னைச் சபிக்கிறேன். இன்று முதல் என் சந்நிதி மேலே உன் இனமே பறக்க முடியாது' என்று சாபம் விட்டாராம். அன்றுமுதல், அய்யர்மலைக்கு மேலே காகங்களால் பறக்க முடியாது. அப்படியே பறந்து வர நினைத்தாலும், மின்சாரம் தாக்கியதுபோல் காகங்களுக்கு ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் அய்யர் மலை மாணிக்க மலை, வாட் போக்கி மலை, ஐவர் மலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்த சிவஸ்தளத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில், சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

அதன்படி இன்று கார்த்திகை மாதம் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, சோமவார விழா நடைபெற்றது. இதில் அய்யர்மலை கோவில் குடி பாட்டு காரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரரை தரிசித்து வழிபட்டனர்.

மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த நெல், கடலை உள்ளிட்ட பயிர்களை மலையின் வழிநெடுங்கிலும் தூவியும், நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கோழி, மாடு கன்று குட்டிகளை கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

நான்காவது சோமவரம் நிகழ்வான அடுத்த திங்கட்கிழமை பக்தர் ஒருவர், உருண்டு கொண்டே மலை மீது ஏறி இறங்கி தரிசனம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!