ஒரு கோடி மந்திரம் - இறைவன் சுயம்பு லிங்கம். கோயிலுக்கு மூன்று வாசல்கள்

ஒரு கோடி மந்திரம் - இறைவன் சுயம்பு லிங்கம். கோயிலுக்கு மூன்று வாசல்கள்
X
எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் சிறப்பு வாய்ந்த கும்பகோணம் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் என்னும் ஊரில் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் கும்பகோணம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். திருமால் வழிபட்ட கட்டை கோபுரத்தை கடந்து வந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக உள்ளே வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.


முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை இக்கோயிலில் காணலாம். உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார்.

ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது. இக்கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடி, ஒருவர் ஒரு லட்சம் வீதம் 100 பேர் சேர்ந்து 'சிவாய நம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எழுதினர். மொத்தத்தில் ஒரு கோடி மந்திரம் தேறியது. எழுதியவற்றை வீணாக்காமல் பைண்ட் செய்து நூறு புத்தகங்களையும் ஒரு பெட்டகத்தில் அடுக்கி இக்கோயிலில் வைத்துள்ளனர். இதை 40 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்கள்.

இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு 'காணா நட்டம் உடையார்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால், சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. காணா நட்டம் உடையாரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை போன்றவை ஏற்படும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் கல்யாண விநாயகர் சன்னதி அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

இக்கோயிலில் மகாசிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Next Story
ஜி.பி.முத்துவின் ஊர்ப் பஞ்சாயத்து சூப்பர் ஹிட்!மக்கள் மனதில் இடம் பிடித்தார்!