எட்டெழுத்துப் பெருமாள் -தர்மம் காக்கும் தருமபதி..!

எட்டெழுத்துப் பெருமாள்   -தர்மம் காக்கும் தருமபதி..!
X
தெரிந்த கோவில், தெரியாத வரலாறு..!

தருமபதி இது திரேதாயுக காலத்தில் ஆதி நாராயண ஸ்தலமாக, மிகப் பெரிய ஆன்மீகக் கோட்டையாக, ஸ்ரீ ராமபிரான் தனது சக்திகளை ஆதி நாராயணர் சந்ததியில் அவதாரப் பெருக்கத்தோடு மஹாசக்தியாக உருவகித்துக் கொண்ட ஸ்தலமாக விளங்கி, பின், கால ஓட்டத்தில், பூமிக்கடியில் அமிழ்ந்து காணப்படுகிறது என்கிறது அய்யா எம்பெருமான் ஸ்ரீஎட்டெழுத்துப் பெருமாளின் திருக்கணக்கு.

திருநெல்வேலி நகரில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி என்னும் பொருணையாற்று நதிக் கரையில் அமைந்துள்ள இப் புண்ணிய பூமியில் தான் ஸ்ரீ ராமபிரான் ஜடாயுவிற்கு மோட்சம் அருளினார். பின், ஸ்ரீ ராமபிரான் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவ பூஜை நிகழ்த்திய புண்ணிய பூமியும் இதுவே. ராமபிரான் ஈஸ்வரனை பூஜித்த ஸ்தல மாகையால், பழைய ராமேஸ்வரம் என்றும், சிவபெருமானும் ஸ்ரீ ராமபிரானும் சேர்ந்து அருளும் புண்ணிய பூமியாதலால், சேர்ந்த ஐயன் மங்கலம் என்று பெயர் பெற்ற இத்தலங்கள், காலப்போக்கில் மருவி தற்போது அருகன்குளம் மேலூர் என்றும் சேந்திமங்கலம் என்றும் அழைக்கப்படுகின்றன.


1891ம் ஆண்டு ஆனி மாதம் 18ம் தேதி பழைய ராமேஸ்வரம் என்னும் பழைய கிராமத்தில் அவதரித்த மாயாண்டிச்சித்தர் தனது 28ம் வயதில் திருநெல்வேலி அருகில் உள்ள வல்லநாட்டு மலையில் கடுந்தவம் புரிந்து வருகையில், அய்யா எட்டெழுத்துப் பெருமாள் ஒரு வயோதிகர் உருவில் பிரசன்னமாகி, பால்கஞ்சி கொடுத்து, ஊருக்குச் சென்று அய்யாவை வணங்குமாறு கூறி மறைந்து விடுகிறார்; ஓர் ஓலைச்சுவடியும் கைவரப் பெற்றார் மாயாண்டிச்சித்தர்.

அய்யா எட்டெழுத்துப் பெருமாள் உத்தரவுப்படி ஊருக்குத் திரும்பிய மாயாண்டிச்சித்தர், வீட்டில் பெருமாள் சிலையை நிறுவி வழி படத்துவங்கினார். தீர்க்கதரிசியான மாயாண்டிச்சித்தரிடம் சுற்றுவட்டார மக்கள் தங்களின் குறைகளைச் சொல்லி, அய்யாவின் அருள்வாக்குப் பெற்றனர். சிறிது காலத்திற்குப் பின், அய்யாவின் அருளால், தற்போது கோவில் அமைந்துள்ள நிலம் கைவரப்பெற்று, அங்கு ஓர் ஓலைக் குடிசையில் அய்யா எட்டெழுத்துப் பெருமாள் கோவில் அமைந்தது. பின்பு, இரண்டு பிரகாரங்களோடு மண்சுவர்க் கட்டிடம் எழுப்பப்பட்டு தளம் போட்ட கோவிலாக உருவானது ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் ஆலயம்.

சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வரும் மக்கள், தங்கள் மனக் குறைகள், துயரங்கள், நோய்கள், பிரச்சனைகள், திருமணங்கள், குழந்தைப் பாக்கியம் போன்ற வேண்டுதல்களை மாயாண்டிச்சித்தர் மூலமாக அய்யாவிடம் விண்ணப்பித்துத் தீர்வுகளைப் பெற்றனர். உள்ளம் உருகிப் பக்தர்கள் வணங்கிக் கேட்கும் அத்தனையும் பெருமாள் வாரி வழங்க, மாயாண்டிச்சித்தர் அண்ணாவியாக, அய்யா எட்டெழுத்துப் பெருமாளின் கணக்குரைத்தல் மக்களிடம் மிகவும் பிரசித்தமானது. மிகு மழையால் வாடும் பயிர்களைக் காக்க மழையை நிறுத்தியும், நீரின்றி வாடும் பயிர்களைக் காக்க மழையை வருவித்தும் அண்ணா விமாயாண்டிச்சித்தர் அய்யாவின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்.

அக்காலத்தில் ஊர் மக்கள் தங்கள் வயலில் விளையும் நெல், வாழை முதலிய விளை பொருட்களில், முதற் பங்கை எட்டெழுத்துப் பெருமாள் கோவிலுக்கு அள்ளிக் கொடுத்தனர். இதற்குப் 'பெருமாள் மரக்கா' என்றும் 'படிதர்மம்' என்றும் பெயர் வழக்கம் உண்டு.

அய்யாவின்அருளால், மூன்றாவது அண்ணாவி தலைமையில் அமைந்த திருப்பணிக் குழுவின் சீரிய முயற்சியினால் தற்போதைய நிலையில் கட்டி முடிக்கப்பெற்று, 10-2-2000 அன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிகக் கோலாகலமாக ஸ்ரீராமஜெயம் என்ற பேரொலி மந்திரத்தின் இடையே அய்யாவால் நிகழ்த்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!