தெரிந்த கோவில்- தெரியாத வரலாறு -கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில்

தெரிந்த கோவில்- தெரியாத வரலாறு -கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில்
X

கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில்

வருடம் தோறும் தை மாதம் ஒரு நாள் கோவிலின் மூலவர் கைலாசநாதர் மீது சூரிய உதய காலத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தெரிந்த கோவில் தெரியாத வரலாறு -கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில் வரலாறு...

முற்காலத்தில் புளியமரங்கள் சூழ்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக தினமும் நிறைய பசுக்கள் வரும். அப்போது ஒருநாள் மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்துக்குள் தானாக பாலை சொரிந்தது. இந்த சம்பவம் அடுத்து வந்த நாட்களிலும் வாடிக்கையாக நடைபெற, அதனை பசுக்களை மேய்த்து கொண்டிருந்தவர் பார்த்து விடுகிறார். இந்த செய்தி ஊருக்குள் பரவி இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் காதுகள் வரை சென்று விட, மன்னன் தனது படை மற்றும் பரிவாரங்களுடன் வந்து புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்தை தோன்றிப் பார்க்க அங்கு ஒரு புற்றும், சிவலிங்கமும் காணப்படுகிறது.

மன்னன் அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து திருக்கோவில் கட்ட தீர்மானித்து பணிகளை தொடங்கி, சுவாமி குடியிருந்த புளியமரத்தை வெட்டாமல் கோவில் கட்டும்படி உத்தரவு வருகிறது. அதன் படியே புளிய மரத்தில் இருந்து சிறிது இடை வெளி விட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருக்கோவில் எழுப்பப்பட்டதாக இந்த கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ கைலாசநாதர் சுயம்பு திருமேனி உடையவராய் லிங்க ரூபத்தில் காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். பிரதோஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும்.


கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் உள்ள சைவ திருக்கோவில்களில் சற்றே அபூர்வமாக இங்கு உற்சவர் அம்மை நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறாள்.

வருடம் தோறும் தை மாதம் ஒரு நாள் இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர் மீது சூரிய உதய காலத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது. இங்கு இறைவன் வாமதேவ மகரிஷிக்கு காட்சியளித்துள்ளார். இதனால் இங்கு வாமதேவ ரிஷிக்கு சன்னிதி உள்ளது.

இங்கு உறையும் ஆனந்தவல்லி அம்மை மூலவர் மற்றும் உற்சவர் மூர்த்தங்கள் இரண்டுமே நான்கு கரங்களுடன் காட்சித்தருவது சிறப்பம்சம். பொதுவாக பாண்டிய நாட்டில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் அம்மை இரண்டு கரங்கள் உடன் தான் காட்சித் தருவாள். கங்கைகொண்டான், சிவசைலம், ராமேஸ்வரம், கரிவலம்வந்தநல்லூர் ஆகிய ஸ்தலங்களில் மட்டும் அம்மை நான்கு கரங்களுடன் காட்சித்தருவது சிறப்பம்சம்.

இந்த கோவிலில் அம்மன் சன்னதி நுழைவாயிலில் காணப்படும் கல் தூண்களில் நாச்சியார்களுடன் கூடிய மஹாவிஷ்ணுவின் சிற்பம் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களுக்கு என தனி சன்னிதி கிடையாது.

இங்குள்ள தீர்த்தக் கட்டத்தில் அக்னி தேவன் நீராடி இந்த கோவில் இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திருக்கோவிலில் காணப்படும் சீவலமாற பாண்டியனின் கல்வெட்டு மூலம் இந்த கோவிலின் மூர்த்தியான கைலாசநாதருக்கு, கங்கைகொண்டான் உடையார், சீவல்லப மங்கலத்து கைலாயத்து பட்டராகர், கைலாயத்து பெருமான், பாண்டி நாட்டு குடிகொண்ட கோடி வளநாட்டு கீழ களக்கூற்றத்து கங்கை கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து கைலாயமுடையார், கைலாயமுடைய நயினார் ஆகிய பெயர்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் மகனான முடிகொண்ட சோழன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று போரிட்டதால் கங்கைகொண்டான் என்னும் சிறப்பு பெயரை பெற்றான். அவனது வழி வந்த குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில், ராஜேந்திர சோழனின் நினைவாக இந்த ஊருக்கு கங்கைகொண்டான் என்ற பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சைவ ஆகமங்களுள் காரண ஆகம விதிப்படி காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய நான்கு கால பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil