அளவற்ற பலன்களை அள்ளித்தரும் நவராத்திரி விழா பற்றி தெரிஞ்சுக்கங்க...
தினமும் அம்மனை வழிபடும், நவராத்திரி விழா பற்றி தெரிந்துகொள்வோம்.
Navratri Festival -நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும். பிரதமை தொடங்கி தசமி வரை 10 நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை, கடந்த 26ம் தேதி துவங்கியது. இன்று மூன்றாம் நாள் விழா நடக்கிறது.
பண்டிகையின் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. கொலு வைத்து கொண்டாடுவதுதான் நவராத்திரியின் சிறப்பு அம்சம். கொலுவின் முன்பாக பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள்.
நவராத்திரி பண்டிகை
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். நவராத்திரி பண்டிகை கொண்டாடும் ஒன்பது நாட்களும் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம்.
கொலுவில் குடியேறும் அம்பிகை
உலக உயிர்கள் அனைத்திலும் தேவியே இருக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.
கொலு பொம்மைகள் தத்துவம்
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. கொலு படிகள் ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
கொலு பொம்மைகள் வைக்கும் முறை
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.
படிகள் எண்ணிக்கை
கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். கீழிருந்து மேலாக படிகளும் அவற்றில் வைக்கப்படும் பொம்மைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள். ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம்.
மனிதர்கள், ரிஷிகள், தெய்வங்கள்
ஆறாவது படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள். ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம். எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம். ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.
இறைவனை அடையும் தத்துவம்
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி பண்டிகையில் படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.
நவராத்திரி சிறப்பு
நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்.
பிரதமை
நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. அன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.
துவிதியை
இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.
திரிதியை
மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
சதுர்த்தி
நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
பஞ்சமி
ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.
சஷ்டி
ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.
சப்தமி
ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
அஷ்டமி
எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.
நவமி
ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னை யை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து
விஜயதசமி
பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.
அஷ்ட லஷ்மி ஸ்தோத்ரம், லலிதா சஹஸ்ரநாமம், லஷ்மி சஹஸ்ரநாமம் ,தேவி பாகவதம், படித்து நாமஸ்மரணை செய்து நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அளவில்லாத பலன்களை அடைவர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu