மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டி நல்லாண்டவர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் நல்லாண்டவர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ஆண்டவர் கோவில் பகுதியில் மான்பூண்டி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழைமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் ஆடி 1 ம் தேதி பால்குடம் நடை பெற்றதைத் தொடர்ந்து ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நல்லாண்டவர் கோவில் உற்சவர் மான்பூண்டி நல்லாண்டவர், முத்துக்கருண்ணசாமி, ஏழு சப்த கன்னிமார்கள், இலாட சன்னியாசி, வெள்ளையம்மாள் - பொம்மியம்மாள் உடனாய மதுரை வீரன், பரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, பேச்சியம்மாள், ஓங்கார விநாயகர், தெப்பக்குளக்கரையில் முருகனும் உள்ள இந்த கோவிலில் முக்கிய திருவிழாவான ஆடி நான்காம் வெள்ளித் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு நல்லாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மங்கள இசை அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கேரள செண்டை மேளம், இரவு 9 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் நள்ளிரவு 2.30 மணிக்கு நல்லாண்டவர் சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா மற்றும் திருக்கோவில் தெய்வங்கள் அழகுமிகு மின்முத்துப்பள்ளக்கில் திருவீதி உலா நடைபெறுகின்றது.
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அழ.வைரவன், பரம்பரை அறங்காவலரும், பொய்கைபட்டி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர் தலைமையில் முன்னாள் மணியம் சண்முகம் அனைத்து கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து 18 ம் தேதி ஆடி மாத 5 ம் வெள்ளித் திருவிழாவும் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 3 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பாலாலயம் செய்து கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகளை கண்ணுடையான்பட்டி ஊராட்சித் தலைவர் தங்கமணி முருகன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu