kandha sasti kavasam : கஷ்டத்தில் காக்கும் கந்த சஷ்டி கவசம்.. படித்தால் பல நன்மைகள்

kandha sasti kavasam : கஷ்டத்தில் காக்கும் கந்த சஷ்டி கவசம்.. படித்தால் பல நன்மைகள்
X

பைல் படம்.

kandha sasti kavasam : கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

kandha sasti kavasam - கந்த சஷ்டி கவசம் என்பது தீமைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றக்கூடியதாகும். கடவுள் முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்ட பாடல். முருகப் பக்தரான ஸ்ரீதேவராய சுவாமிகள் மிக எளிய முறையில் கந்த சஷ்டி கவசத்தை இயற்றியுள்ளார்.

kandha sasti kavasam in tamil

தினமும் காலை மாலை என இரு வேளைகளில் படித்து வந்தோமானால் முருகனே நமக்கு காட்சி தந்து விடுவான். ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 6ம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவற்றைக் குறிக்கும். நாம் முருகனின் திருவடியை இடைவிடாமல் சிக்கென பிடித்தால் இந்த கெடுதல்கள் நம்மை அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லாமல் போய்விடும்.

கந்தன் வரும் அழகே அழகுதான். பாதம் இரண்டில் பன்மணிச்சலங்கை…கீதம் பாட…கிண்கிணியாட…மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? என இந்திரன் மற்றும் எட்டு திசைகளில் இருந்தும் மக்கள் அனைவரும் போற்றுகின்றனர்.

முருகன் வந்து விட்டான்..இப்போது என்னை காக்க வேண்டும். 12 விழிகளும், 12 ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும். அவரது அழகை வர்ணிக்கும்போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்து ஆடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலைகளும் அசைந்து ஆட உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும், சுடர் ஒளி விட்டு வீசுகிறது.

மயில் மேல் ஏறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா என்று தேவராயர் வர்ணிக்கிறார்.

வதனத்திற்கு அழகு வேல். நெற்றிக்குப் புனிதவேல். கண்ணிற்கு கதிர்வேல். நாசிகளுக்கு நல்வேல். செவிகளுக்கு வேலவர் வேல். பற்களுக்கு முனைவேல். செப்பிய நாவிற்கு செவ்வேல். கன்னத்திற்கு கதிர்வேல். கழுத்திற்கு இனிய வேல். மார்பிற்கு ரத்ன வடிவேல்.

இளமுலை மார்புக்கு திருவேல். தோள்களுக்கு வடிவேல். பிடறிகளுக்கு பெருவேல். அழகு முதுகிற்கு அருள்வேல். வயிற்றுக்கு வெற்றிவேல். சின்ன இடைக்கு செவ்வேல். நாண்கயிற்றை நால்வேல். பிட்டம் இரண்டும் பெருவேல். கணைக்காலுக்கு கதிர்வேல்.

ஐந்து விரல்களுக்கு அருள்வேல். கைகளுக்கு கருணை வேல். நாபிக்கமலம் நல்வேல். முப்பால் நாடியை முனைவேல். எப்போதும் என்னை எதிர்வேல். பகலில் வஜ்ரவேல். இரவில் அனையவேல் என்று பலவிதமான வேல்கள் நம்மைக் காத்து நிற்கின்றன.

அடுத்தடுத்து எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்ல பூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி என எத்தனை கொடிய பயங்கள் இருந்தாலும் முருகனின் பெயரைச் சொன்னாலே ஓடி ஒளிந்து கொள்ளும் என்கிறார் தேவராயர்.

புலி, நரி, எலி, கரடி, தேள், பாம்பு, செய்யான், பூரான் என எத்தகைய விஷ ஜந்துகள் இருந்தாலும் அவற்றால் உண்டாகும் விஷம் சஷ்டி கவசத்தின் ஓசையைக் கேட்டதுமே இறங்கி விடும்.

வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற கொடும் வியாதிகள் கந்த சஷ்டி கவசத்தைப் படித்ததும் சரியாகி விடும். அது மட்டுமல்ல. வறுமை கொடுமை ஓடிவிடும். நவக்கிரகங்களும் நமக்குத் துணை நிற்கும்.

சத்ருகள் மனம் மாறி விடுவர். என்றும் முகத்தில் தெய்வீகக் களை அதாவது ஒளி வீசும். ஆதலால் கந்த சஷ்டி கவசத்தை தினமும் தவறாமல் படியுங்கள். வேலனைப் போற்றி வணங்குங்கள். நீங்கள் இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

கந்த சஷ்டி கவசத்தில் உயிர்ப்புள்ள விதைகளைப் போன்ற எழுத்துக்களை நாம் ஒன்று சேர்த்து உச்சரிக்க அதுவே மந்திரமாகிறது. அதை நாம் தினமும் ஓதும்போது நாம் இறைவனின் காலடியை அடைய முடிகிறது. சரவணபவ, குமாராயநம என்ற ஆறெழுத்து மந்திரமானது மூலாதார எழுத்துக்குரிய நாதத் தத்துவமாய் விளங்குகிறது.

கந்த சஷ்டி கவசத்தில் வரும் ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும், கிலியும் சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும் என்ற வரிகள் இடம்பெறுகின்றன. ஆறுமுகனே என் மனக்கண் முன் தினமும் நிலையாக நின்று ஒளிர வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்துடன் நாம் சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

ஓம் ஐம் சரவணபவாய நம

ஓம் க்லீம் சிகாயை வஷட்

ஓம் ஸெளம் சுப்ரமண்யாய நமஹ

சக்தி மிக்க இந்த மந்திரங்களை எல்லோரும் சொல்லக்கூடாது. குருவின் உபதேசம் பெற்று முறையாக சொல்லும்போது முருகனின் பரிபூரண அருள் நமக்குக் கிட்டுகிறது. இப்படி முறையாக நாம் சொல்லும்போது நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் வரங்களாக பெற முடியும் எனறு சத்தியம் செய்கிறார் தேவராயர்.

நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்…

ஓம் ஐம் க்லீம் ஸெளம் சரவண பவாய

குமார தேவாய நமஹ.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!