கடையம் வில்வ வனநாதர் கோயில் - தெரிந்த கோயில் தெரியாத வரலாறு...

கடையம் வில்வ வனநாதர் கோயில் - தெரிந்த கோயில் தெரியாத வரலாறு...
X

வில்வவனநாதர் கோயில் -கடையம்

பாட்டுக்கொரு புலவரான பாரதியார் இவ்வூரின் மருமகன்"காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்ற புகழ் பெற்ற உருவான இடமிது.

"காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்ற புகழ் பெற்ற பாடலை பாரதி எழுதிய இடம் தெரியுமா?

வாங்க வரலாறு படிப்போம்..

வில்வவனநாதர் திருக்கோயில், நெல்லை மாவட்டம் கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறையவன் பெயர் வில்வவனநாதர், தாயார் நித்ய கல்யாணி. இங்குள்ள பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள்.

இங்குள்ள வில்வ மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வபழத்தைக் கொடுத்தாராம் அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாதசாந்தவனப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். இங்குள்ள வில்வ காய் உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தின் வரலாறு காபிலோ புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது,தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் தென்னகத்துக்கு வந்து, அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.


அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை அவர் வணங்கினார். அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார். அயோத்தியில் இராமராஜ்யம் நடந்த போது,அகால மரணமே யாருக்கும் ஏற்படவில்லை.இதைக்கண்டு பொறாமைப்பட்ட சம்புகன் என்ற கொடியவன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டித் தவம் செய்தான். அவனை இராமபிரான் கொன்றுவிட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி,வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார்.

இராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு "இராம நதி" என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பவித்ரமான இந்த நதி செல்லும் இடங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை கூட மணல் வெளியாக காட்சியளித்தன. இப்போது புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த நதியின் வரலாற்று முக்கியத்துவம் கருதியாவது பொதுமக்களோ அரசோ, பாதுகாக்க வேண்டும்..

பாட்டுக்கொரு புலவரான பாரதியார் இவ்வூரின் மருமகன் ஆவார். இங்கு வசித்த செல்லம்மாளை அவர் திருமணம் செய்தார். இவ்வூரில் தன் வாழ்நாளில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார். அப்போது வில்வவனநாத சுவாமி கோயிலுக்கு வந்து வில்வவனநாதர் மற்றும் நித்யகல்யாணி அம்பாள் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் எழுதிய நவராத்திரி பாடலில், ""உஜ்ஜெயினீ நித்ய கல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி" என்று பாடினார்.சங்கரன்தேவி, சரஸ்வதி மாதா, மகேஸ்வரன் தோழி,மகாலட்சுமி, உத்தமதேவி என்று அவர் நித்யகல்யாணி அம்மனை வர்ணித்துள்ளார். கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்ற புகழ் பெற்ற பாடலை அவர் எழுதினார்.

இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சன்னதியில் இருந்தாள். இவளுக்கு பூஜை செய்வதென்றால், சற்றும் விதிமுறைகள் தவறாமல் செய்ய வேண்டியிருந்தது.இதில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் இறந்து விடுவார்கள். இதனால், கோயில் பக்கமே யாரும் செல்ல அஞ்சினர். இவ்வூரில் வசித்த தேவதாசியான நாட்டியமங்கை ஒருத்தி இந்த அம்பாள் மீது மிகுந்த பக்திகொண்டவள். தவறான தொழில் செய்து வந்தாலும், அதில் கிடைக்கும் பணம் முழுவதையும் அம்பாளுக்காகவே செலவிடுவாள்.அவள் அர்ச்சகர் ஒருவரிடம் மாலை ஒன்றை கொடுத்தனுப்பினாள்.

அந்த மாலையுடன் சென்ற அவர்,அம்பாள் உக்கிர நிலையில் இருந்ததால், பூஜை செய்ய இயலாது எனத் திரும்பி விட்டார். பிற்காலத்தில், பல யோசனைகளுக்குப் பிறகு தெற்கு நோக்கியிருந்த ஒரு சன்னதியில் அம்பாள் சிலை வைக்கப்பட்டது.அம்பாளின் சக்தி 16 கலைகளாக சிலைக்குள் அடக்கப்படுமாம். இதில் 15 கலைகளைப் பிரித்து ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது. இந்த பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள். ஒரு கலையுடன் சாந்ததேவியாக அம்பாளுக்கு பூஜைகள் துவங்கின.அதன் பிறகு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை.

"கல்யாணி' என்ற பெயருக்கு சிறப்பான அர்த்தங்கள்" உண்டு. வடமொழிகளின் படி "கல்யாண்" என்றால் மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு,வளம், கருணை, நன்மை தரவல்லது, ஆசீர்வாதம்,பரிசுத்தமானது, வணங்கத்தக்கது, சொர்க்கம் என்ற பொருள்கள் உள்ளன. அதிலும் இத்தலத்து அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரமருளுபவளாகக் கருதப்படுகிறாள். இவளது சன்னதியில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு சூடிக்கொண்டுள்ளார். பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வப்பழத்தைக் கொடுத்தார்.அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றைக் கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார்.

அந்த துவாதசாந்தவனப் பகுதியில் தான் வில்வவனநாதர் கோயில் உள்ளது. தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். தற்போது கோயிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய் காய்க்கும்.இதை எடுத்து உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்தக் காய் கிடைத்துள்ளது. அவற்றை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

இது ஒரு சிவாலயமாயினும், இராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன. ஒருமுறை,தசரதர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, சிரவணன் என்ற சிறுவன் கண்ணிழந்த தன் பெற்றோருக்காக காட்டிலுள்ள ஒரு சுனையில் தண்ணீர் எடுக்க வந்தான். சுனையில் தண்ணீர் சப்தம் கேட்ட தசரதர், ஏதோ மிருகம் தான் தண்ணீர் குடிக்கிறது என தவறாக நினைத்து, ஒரு அம்பை அந்த திசையை நோக்கி எய்தார். அது சிரவணன் மீது பட்டு அவன் இறந்தான். அவனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட தசரதரிடம், "எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் இறப்பாய்" என்று சாபமிட்டு மடிந்தனர்.

தசரதர் வில்வவனநாதரை வணங்கி தன் பாவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவமே இங்குள்ள வனத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் சுனை ஒன்றும் உள்ளது. இப்போது கூட கோயில் இருக்கும் இடம் அமைதியான வனமாக உள்ளது. இக்கோயில் கதவில் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!