kadaga rasi ayilyam natchathiram-ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்.

kadaga rasi ayilyam natchathiram-ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்.
X
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், அவர்களது கல்வி மற்றும் தொழில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்

நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயில்யம். ராமன் வனவாசம் புறப்பட்டபோது, உடன் சென்று பணிவிடை செய்வதையே கடமையாகக்கொண்ட லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் இது.

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இது கடக ராசியின் நட்சத்திரம். சமயோஜித புத்தி கொண்டவர்கள். இனிமையாக பேசுபவர்கள். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். சிறந்த அறிவாற்றலைக் கொண்டவர்கள். வாழ்வில் வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள்.

மன வலிமையும், உடல் வலிமையும் ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவைக் கொண்டவர்கள். ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்ற ஒரு சொல் இருக்கிறது. ஆனால் பண்டைய சாஸ்திரங்களில் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. மற்றவர்கள் ஆலோசனையை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே தான் செய்வார்கள்.

ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடித்துவிட்டுத் தான் அமர்வார்கள். எதிரிகளை கண்டு அஞ்சாதவர்கள். நியாத்தையும், தர்மத்தையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். இயற்கை விரும்பிகளாக இருப்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். இளவயதிலேயே திருமண வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.

சிறுவயதில் வறுமையில் போராடினாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்காக அதிக செலவுகள் செய்வார்கள். திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவார்கள். வேலை செய்யும் இடத்தில் நேர்மை, நாணயம், விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். மனசாட்சியோடு நடந்து கொள்வார்கள். ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டாலும் தவறிழைக்க மாட்டார்கள். நீண்ட ஆயுள் பலத்தைப் பெற்றவர்கள்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகிய கண்களையும், சுருட்டை முடியையும் கொண்டிருப்பார்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் யுக்தி தெரிந்தவர்கள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றாலும், கல்வியறிவும் இருக்கும். சகல வித்தைகளையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தங்களது இனிமையான பேச்சினால் கல்லையும் கரைய வைத்து விடுவார்கள். மன வலிமையையும், உடல் வலிமையையும் ஒருங்கே பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளக் கூடிய திறமை படைத்தவர்கள். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவர்கள். மற்றவர்களை நம்பமாட்டார்கள். எந்த காரியத்தையும் தானே முடிவு செய்து செயலாற்றுவார்கள். இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள். பயணங்களில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.

கல்வி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற வேட்கை இவர்களுக்குள் இருக்கும். சகல துறைகளையும் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள்.

உத்தியோகம்

பணிபுரியும் இடத்தில் நீதி தவறாமல் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள். மனசாட்சிக்கு எதிராக எந்தக் காரியத்திலும் நடந்து கொள்ளமாட்டார்கள். மன தைரியம் கொண்டவர்கள். பலர் கல்லூரி பேராசிரியர்களாகவும், ஆய்வுக் கூடங்களில் அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பார்கள். அதிகாரமிக்க பதவிகளில் அமர்வார்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்களாக விளங்குவார்கள். மெக்கானிக்கல், பொறியியல் துறையில் வல்லவர்களாக இருப்பார்கள். பெட்ரோலியம், இரசாயனம் போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள்.

திருமண வாழ்க்கை

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை அமைந்துவிடும். மனைவி, பிள்கைகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி, வாகனம், பூமி அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்வார்கள்.

நுரையீரல், வயிறு, உணவுக் குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு, கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்னைகள் உண்டாகலாம். மூட்டு வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகளும் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

ஆயில்யம் ஒன்றாம் பாதம்

இது குருவின் அம்சம் பொருந்தியது. இதில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் முனைப்புடன் செயல்படுவார்கள். கோபமும் இருக்கும், குணமும் இருக்கும். மற்றவர்கள் புகழ்வதை விரும்புகிறவர்கள்.

ஆயில்யம் இரண்டாம் பாதம்

சனி பகவான் இதன் அதிபதியாவார். சுகபோகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேசுவார்கள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகச்சரியாக செய்வார்கள்.

ஆயில்யம் மூன்றாம் பாதம்

மூன்றாம் பாதத்தை ஆள்பவரும் சனி பகவான் தான். முன்கோபிகள், செல்வத்தை எந்த வழியிலாவது அடைய முயற்சிப்பார்கள். மற்றவர்கள் அறிவுரையை கேட்கமாட்டார்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் குணமுடையவர்கள்.

ஆயில்யம் நான்காம் பாதம்

இதன் அதிபதி குரு பகவான். புத்திசாலிகள் தான் ஆனால் சோம்பேறிகள். எதிர்மறையாக சிந்திக்கக் கூடியவர்கள். நோகாமல் நுங்கு திங்க ஆசைப்படுபவர்கள். எந்தச் செயலைச் செய்தாலும் திட்டமிட்டு செய்யமாட்டார்கள். ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிள்ளைகள் பிறந்தால் பெற்றோர்களுக்கு துன்பம் வரும் என்பதால் ‘சந்திர சாந்தி’ என்ற பூஜையை செய்வது நலம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்